தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

இயேசு வரலாறு – 4

Posted by tamilmuslim மேல் ஜூலை 1, 2007

மரியாளின் கர்ப்பம் (பைபிள் என்ன சொல்கிறது?) – 4
பரங்கிப்பேட்டை ஜி.நிஜாமுத்தீன்
பைபிள் என்பது கிறிஸ்துவர்களின் நம்பிக்கைப்படி வேத புத்தகமாகும். அவர்களுக்குள் இருக்கும் இரு பெரும் பிரிவினரான கத்தோலிக்க பிரிவினரிடம் உள்ள பைபிளுக்கும் – மற்றொரு பிரிவினரான புராட்டஸ்டண்ட் பிரிவினரிடம் உள்ள பைபிளுக்கும் நிறைய வேறுபாடுகள் ஆகமங்களில் கூடுதல் குறைவு வரலாற்று முரண்பாடுகள் ஆகியவை உள்ளன. நாம் இங்கு எடுத்துக் காட்டும் பைபிள் வசனங்கள் அனைத்தும் இந்திய வேதாகம சங்கம் பெங்களுர் என்ற முகவரியுடன் வெளியிடப்பட்ட பைபிளிலிருந்துதான் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
புதிய ஏற்பாட்டின் முந்தய நான்கு சுவிசேஷங்கள் மத்தேயு – மார்க்கு – லூக்கா – யோவான் ஆகியவையாகும். இந்த நான்கு புத்தகங்களும் இயேசுவின் வரலாற்றை கூறுவதற்காக எழுதப்பட்டவையாகும். இவற்றில் மத்தேயும் – லூக்காவும் இயேசுவின் வம்சங்களைப் பற்றி தலைமுறை விபரங்கள் உட்பட கூறியுள்ளார்கள். (மத்தேயு குறிப்பிடும் தலைமுறைப்பட்டியல் பின்னர் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது. காரணம் இயேசுவின் பரிசுத்தத்தன்மையi கேள்விக்குறியாக்கும் விபரமும், தலைமுறைகளின் கால அளவு கோளாறுகளுமேயாகும்)
இயேசுவின் வரலாற்றை தெரிந்துக் கொள்வதற்கு இவர்கள் குறிப்பிடும் தலைமுறைகளை ஓரளவு அறிந்துக் கொள்வது நல்லது.
மத்தேயு – அதிகாரம் ஒன்று.
ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு.
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான், ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான், யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரனையும் பெற்றான்.
யூதா பாரேசையும், சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான், என்ரோம் அராமைப் பெற்றான்.
ஆராம் அமினதாபைப் பெற்றான், அம்மினத்தாப் நாகசோனைப் பெற்றான், நாகசோன் சால்மோனைப் பெற்றான்.
ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான், தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலமோனைப் பெற்றான்.
இப்படியாக தொடரும் வம்ச பட்டியலில்
எலியூத் எலேயாசாரைப் பெற்றான், அவன் மாத்தாளைப் பெற்றான், மாத்தான் யாக்கோபைப் பெற்றான்,
யாக்கோபு மரியாளின் புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான், அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் அபிராம் முதல் தாவீது வரை பதினாலு தலைமுறைகளும் தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். (ஆரம்ப பதினேழு வசனங்கள்)
இயேசு கிறிஸ்த்துவினுடைய ஜனனத்தின் விபரமாவது அவருடைய தாயாகிய மரியாள் யோசோப்புக்கு நியமிக்கபட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனமில்லாமல் இரகசியமாக அவளை தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
அவன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு ‘தாவீதின் குமாரனாகிய யேசேப்பே! உன் மனைவியாகிய மரியளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே. அவளிடத்தில் உற்பத்தியாகி இருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
தீர்க்கதரிசிகளின் மூலமாய் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும் படி இதெல்லாம் நடந்தது.
அவன் இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். (அதிகாரம் ஒன்று முடிய உள்ள வசனங்கள்)
லூக்கா வரலாற்றை எப்படி ஆரம்பிக்கிறார் பாருங்கள்
மகா கனம் பொருந்திய தெயோப்பிலுவே நாங்கள் முழு நிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,
ஆரம்ப முதல் கண்ணார கண்டு வசனங்களை போதிக்கிறவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தப்படியே அவைகளை குறித்து அனேகம் பேர் சரித்திரம் எழுத ஏற்பட்டப்படியினால்,
ஆரம்ப முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தரிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விஷேஷங்களில் நிச்சயமாய் நீ அறிய வேண்டும் என்று,
அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய் தோன்றிற்று. (லூக்கா ஆரம்ப நான்கு வசனங்கள்)
அபியா எனும் ஆசாரிய வகுப்பில் சகரிய்யா என்ற பெயர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி பெயர் எலிசபத்து.
எலிசபத்து மலடியாய் இருந்தபடியால் அவளுக்கு பிள்ளையில்லாமலிருந்தது. இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்.
கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலது பக்கம் நின்று அவனுக்கு தரிசனமானான்.
சகரிய்யா அவனைக் கண்டு கலங்கி பயமடைந்தான். தூதன் அவனை நோக்கி சகரிய்யாவே பயப்படாதே. உன் மனைவி எலிசபத்து உமக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக.
அவன் கர்த்தருக்கு முன்பாக பெரியவனாய் இருப்பான். திராட்சை ரசமும் மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்;. (லூக்கா 5 – 15 வசனங்கள்.)
இயேசுவின் வரலாற்றை பைபிளிலிருந்து தெரிந்துக் கொள்ள பைபிள் கூறும் வம்சா வழி தலைமுறைகளை ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அந்த பட்டியலின் விபரத்தையும் கண்டோம்
உலகில் ஒரு பெரும் சமூகத்தினரால் மிக முக்கியமானவராக கருதப்படும் இயேசுவின் உண்மை நிலைகளை தெரிந்துக் கொள்வதற்காக இந்த தொடர் எழுதப்படுகிறது. கிறிஸ்தவர்களில் ஒருசாராரின் நம்பிக்கைப்படி இயேசு கிறிஸ்து கடவுளின் மகனாக போற்றபடுகிறார். முஸ்லிம்கள் இதை மறுத்து இயேசு கடவுளின் குமாரனல்ல அவர் மிக சிறந்த ஒரு தேவ தூதர் – கடவுளால் அனுப்பபட்ட தூதர் என்கின்றனர். நேர் எதிரான இந்த முரண்பாட்டை களைய வேண்டுமானால் இரு கருத்துடையவர்களும் அவரவர்களும் புனிதமாக கருதும் வேதங்களிலிருந்துதான் முயற்சிக்க வேண்டும். அந்த அடிப்படையில் இயேசு பற்றி குர்ஆனிலும் பைபிளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திருமணம் செய்யாமல் – கன்னிக் கழியாமல் இருந்த மரியாளும், திருணம் செய்து குழந்தைப் பேறு இல்லாமல் முதிர்ந்த வயதை அடைந்து மாதவிடாயெல்லாம் நின்று போன கிழ வயதிலிருந்த சகரிய்யாவின் மனைவி எலிசபத்தும் ஒரே நேரத்தில் – சில மாத இடைவெளியில் (பைபிள்) கர்ப்பம் தரிக்கிறார்கள். மரியாளைப் பார்த்து சுப செய்தி சொன்ன அதே வானவர் சகரிய்யாவிற்கும் சுப செய்தி சொல்லி செல்கிறார்.
லூக்காவின் வராலாறு தொடர்கிறது.
தாவீது வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையிடத்திற்கு தேவனாலேயே அனுப்பட்ட தூதன் வந்தான். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள்.
அவளிருந்த விட்டில் அவன் பிரவேசித்து கிருபைப் பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடன் இருக்கிறார் ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசிர்வதிக்கப்பட்டவள் என்றான்.
நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராய் இருப்பார் உன்னதமானவருடைய குமாரன் எனப்படுவார். கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தை என்றென்றும் அரசாளுவார் அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது என்றான்.
அதற்கு மரியாள் தேவ தூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
தேவ தூதன் அவளுக்கு பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும். அதனால் உன்னிடம் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும். (லூக்கா அதிகாரம் 1 வசனங்கள் 27 – 35)
முந்தய தொடரில் இயேசுவின் பிறப்புப் பற்றி குர்ஆனில் சொல்லப்பட்ட விபரங்களை கண்டோம். பைபிளில் லூக்கா மட்டுமே மேற்கண்ட விபரங்களை கூறுகிறார். மாற்கு – மத்தேயு – யோவானில் இந்த விபரங்கள் கூறப்படவில்லை.
இயேசுவின் குழந்தை அற்புதம் பற்றி பைபிளில் எங்குமே சொல்லப்படவில்லை. ஆனால் குர்ஆன் அதை மிக அற்புதமாக விவரிக்கின்றது. அந்த அற்புதங்களை விரிவாக அறியுமுன் மரியாளுக்கு சொல்லப்பட்ட சுப செய்தி பற்றிய வார்த்தைகளின் ஆழத்தை நாம் விளங்குவோம்.
தேவ தூதர் மரியாளுக்கு சுப செய்தி கூறுகிறார். இது எப்படி சாத்தியம் நான் புருஷனைப் பெற்றிருக்கவில்லையே என்கிறார் மரியாள். பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும் என்பது தேவதூதன் மரியாளுக்கு சொன்ன வார்த்தை. இது லூக்காவின் விபரம். (மற்ற சுவிசேஷங்களில் இது கூட இல்லை)
ஆனால் இதே விபரத்தை குர்ஆன் கூறும் போது மிகுந்த பொருள் பொதிந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இயேசு பற்றிய அற்புதத்தை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது.
எந்த ஆணும் என்னை தீண்டாமலும், நான் நடத்தைக் கெட்டவளாக இல்லாமலும் இருக்கும் நிலையில் எனக்கு எப்படி குழந்தை உருவாக முடியும்? என்று மரியாள் கேட்கிறார். (அல் குர்ஆன் 19:20)
அது அப்படித்தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்று மிக்கவராகவும் நம் அருளாகவும் ஆக்குவோம். இது கட்டாயம் நிறைவேறும் கடமையாகும் என்று இறைவன் கூறுவதாக அவர் கூறினார் (அல் குர்ஆன் 19:21)

இது எப்படி சாத்தியமாகும். குழந்தை உருவாக வேண்டுமானால் ஒன்று எனக்கு திருமணம் முடிந்திருக்க வேண்டும். அல்லது நான் தவறி இருக்க வேண்டும். இரண்டும் நடக்காத போது குழந்தை உருவாவது என்பது எப்படி சாத்தியம் என்பது மரியாளின் சந்தேகம்.
பரிசுத்த ஆவி உன்மேல் இறங்கும். தேவனின் பலம் உன்மேல் நிழலிடும் என்று பைபிள் கூறிவிடுகிறது.
குர்ஆன்,
அது அப்படித்தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்று மிக்கவராகவும் நம் அருளாகவும் ஆக்குவோம். இது கட்டாயம் நிறைவேறும் கடமையாகும் என்று இறைவன் கூறுவதாக அவர் கூறினார் (அல் குர்ஆன் 19:21) என்று கூறுகிறது.
இதில் இயேசுவை ‘மக்களுக்கு சான்றாகவும், அருளாகவும்’ ஆக்கப்போவதாக கர்த்தர் குறிப்பிடும் வார்த்தை இடம் பெறுகிறது.
மக்களுக்கு சான்றாக அவர் ஆக்கப்பட்டுள்ளார் என்றால் என்ன?
தந்தையில்லமல் பிறந்தது, தொட்டில் குழந்தையாக இருக்கும் போது பேசியது (இது பின்னர் வருகிறது) இறந்தவர்களை உயிர்பித்தது உட்பட பல அற்புதங்களை செய்து காட்டியது, இன்றளவும் உயிரோடு வாழ்வது என்று பற்பல அத்தாட்சிகள் அவரிடம் இருக்கின்றன. சமீபத்திய உலகிற்கு கூட அவர் ஒரு அத்தாட்சியாக்கப்பட்டுள்ளார் சிந்திக்கும் போது விளங்கலாம்.
ஆம் குளோனிங் என்ற நகல் உயிரியின் உருவாக்கத்தை மனிதன் நிகழ்த்திக்காட்டி ஆண்டுகள் சில கடந்து விட்டன.
ஆண் உயிரினமும், பெண் உயிரினமும் இணைந்து அவற்றின் உயிரணுவும், சினை முட்டையும் இரண்டற கலப்பதின் வழியாகத்தான் ஒரு புதிய உயிர் உருவாகும் என்பதுதான் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை மனித வரலாற்றில் நிலைத்திருந்த நம்பிக்கையும் ஆதாரமுமாகும்.
ஆணோடு பெண்ணோ, பெண்ணோடு ஆணோ சேராவிட்டால் ஒரு புதிய உயிர் – புதிய குழந்தை – உருவாகும் என்று கற்பனைக் கூட செய்து பார்த்திராமல் தான் மனிதன் கடந்த காலம் வரை வாழ்ந்து வந்துள்ளான்.
மனிதனின் இந்த சிந்தனையோட்டத்தை மாற்றியமைத்து ஒரு புதிய புரட்சியை உருவாக்கிக் காட்டினார் ஆஸ்த்ரேலிய விஞ்ஞானி.
உயிரணுவும், சினை முட்டையும் இணைவது என்ற நிலையை மாற்றி சினை முட்டையுடன் மரபணுவை இணைத்து ஒரு புதிய உயிரை (டோலி என்ற ஆட்டுக்குட்டியை) உருவாக்கி உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் அந்த ஆஸ்த்ரேலிய விஞ்ஞானி. அதன் மீது கடும் விவாதங்களும் சர்ச்சைகளும் நடந்த வண்ணம் இருந்தாலும் இரண்டு பாலினங்கள் உறவு கொள்ளாமல் – கலக்காமல் – ஒரு பாலினத்திலிருந்தே புதிய உயிரியை உருவாக்கும் பணி உலகில் வேகமாக நடந்துக் கொண்டிருக்கிறது.
அந்த ஆட்டுக்குட்டியை தொடர்ந்து மாடு, குரங்கு, நாய் என்று பல உயிரினங்களை நகல் உயிரியாக மேலை நாட்டவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த முறையில் புதிதாக மனிதனை உருவக்குவதற்கு கடின எதிர்ப்பு உலகில் நிகழ்ந்தாலும் நகல் மனிதனை உருவாக்கும் முயற்சியில் அமேரிக்கா விஞ்ஞானிகள் ஈடுபட்டார்கள். சமீபத்தில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளது.
எப்படி சாத்தியம்?
எந்த ஒரு ஆணாக இருந்தாலும் சரி அவனிடம் நூறு சதவிகிதம் ஆண் தன்மை இருப்பதில்லை. அதே போன்று தான் பெண்ணும். எந்த ஒரு பெண்ணிடமும் நூறு சதவிகிதம் பெண் தன்மை இருப்பதில்iலை. ஆண் பெண் இரண்டற கலந்து புதிய உயிர் உருவாவதால் புதிய உயிருக்கு இரண்டு பாலினங்களின் தாக்கமும் இருக்கவே செய்யும் என்பது இன்றைக்கு சாதாரண உண்மை.
பெண்களின் உடலில் ஆணினம் சார்ந்த மரபணுக்களும், ஆண்களின் உடலில் பெண்ணினம் சார்ந்த மரபணுக்களும் இருக்கவே செய்கின்றன. பெண்ணிடம் உள்ள ஆண் சார்ந்த மரபணுவை கண்டரிந்து எடுத்து அதே பெண்ணிடம் உள்ள சினை முட்டையுடன் இணைத்தால் என்னவாகும்? மரபணு சார்ந்த ஒரு புதிய குழந்தை உருவாகி விடும். அதாவது ஆணோடு உறவு கொள்ளாமலே மரபணு குழந்தைக்கு ஒரு பெண்ணால் தாயாக முடியும். இதுவே நகல் உயிரி பற்றிய ஆராய்சியின் வளர்ச்சி நிலையாக உள்ளது.
1990களின் இறுதியில் உலகை கலக்கிய ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பை ‘இது நடந்தே தீரும் ஆனால் நீண்ட காலம் பிடிக்கும் இது நடக்கும் என்பதற்கு இயேசு ஒரு அத்தாட்சியாவார்’ என்பது போன்ற பல உண்மைகளை வெளிபடுத்தும் விதமாகவே குர்ஆனில் மரியாளுக்கு சுப செய்தி சொல்லப்பட்ட வாசக அமைப்புகள் அமைந்துள்ளன.
‘நானும் கெட்டுப்போகாமல் இருக்கும் போது, எனக்கு திருமணமும் நடக்காத நிலையில் எனக்கு எப்படி குழந்தை பிறக்கும்…’ என்பது மரியாளின் ஆச்சர்யம் கலந்த வினா.
‘அது அப்படித்தான் எனக்கு இது மிக எளிதானது’ என்பது கர்த்தரின் பதில்.
மரியாளின் கேள்விக்குரிய சரியான பதில் தானா இது?.
சிலருக்கு சில நேரம் மிக அழுத்தமான கேள்விகள் பிறந்தாலும் அதற்குரிய பதிலை கிரகிக்கக் கூடிய, சொல்லும் பதிலை ஆய்ந்துணரக் கூடிய நிலையில் அவர்கள் இருக்க மாட்டார்கள்.
தாயின் வயிற்றில் வளரும் குழந்தை குறித்து ‘இந்த பாப்பா உன் வயிற்றில் எப்படிமா வந்தது’ என்று வீட்டில் உள்ள மற்ற சிறுவர்களோ, சிறுமிகளோ கேட்கிறார்கள் என்றால் அவர்களைப் பொருத்தவரையில் அந்த கேள்வி அழுத்தமானக் கேள்விதான். ஆனால் அதற்குரிய பதிலை அவர்களிடம் சொன்னால் அவர்களால் அதை புரிந்துக் கொள்ள முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.
அந்த சந்தர்பங்களில் ‘அது அப்படித்தான் இறைவன் கொடுத்துள்ளான்’ என்று தாய் பதில் சொல்லி விடுவாள்.
சொல்லக் கூடிய பதில் கேள்வி கேட்டவருக்கு புரியக் கூடிய நிலை இருந்தால் மட்டுமே பதில் வெளிப்படுவதில் ஒரு அர்த்தம் இருக்கும்.
மரியாளின் கேள்வி ஆழமானதுதான் என்றாலும் உயிரணு என்றால் என்ன, சினை முட்டை என்றால் என்ன, மரபணு என்றால் என்ன என்ற உடலியல் பற்றிய தெளிவெல்லாம் மரியாளுக்கு இருந்திருக்காது.
அதி நவீன விஞ்ஞான யுகமாக கருதப்படும் இந்த காலத்தில் கூட மாதவிடாய் ஏற்படுவதற்கு கருமுட்டையின் சிதைவுதான் காரணம் என்பது ஏராளமான பெண்களுக்கு தெரிவதில்லை. உதிரப் போக்கிற்கும் மாதவிடாய்கும் உள்ள வித்தியாசங்களை – காரணங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
இன்றைக்கே இதுதான் நிலைமை என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிலமை எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
மரியாளின் கேள்வி அழுத்தமானதுதான் என்றாலும் பதிலை புரிந்து கொள்ளும் நிலையில் அவர் இல்லை என்பதால் அவர் புரியும் விதத்தில் பதில் சொல்லப்படவில்லை.
அறிவு முதிர்ச்சிப் பெற்றவர்கள் புரிந்துக் கொள்ளும் விதத்தில் பதில் முன் வைக்கப்பட்டது.
அது அப்படித்தான், எனக்கு இது மிக இலகுவானது என்கிறான் இறைவன்.
என்னால் மட்டுமே முடியும் என்று கூறாமல் எனக்கு இலகுவானது என்று கூறுவதன் வழியாக பிறராலும் செய்ய முடியும் ஆனால் அவ்வளவு சுலபமாக செய்து விட முடியாது நிறைய கால கட்டங்கள் அதற்கு தேவைப்படும் என்பது போன்ற அர்த்தங்கள் எல்லாம் பொதிந்த நிலையில் தான் அந்த வார்த்தையை கர்த்தர் – இறைவன் பயன்படுத்தியுள்ளான் என்பது அறிவாளிகளின் சிந்தனைக்கு எட்டவே செய்யும்.
ஆணிண் உயிரணுவின்றி, ஆண் துணையின்றி பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கலாம் என்பதை மனிதன் கண்டறிய இயேசுவிற்கு பிறகு இரண்டாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.
‘எனக்கு இலகுவானது’ என்பதை தொடர்ந்து ‘மனிதர்களுக்கு அவரொரு அத்தாட்சியாவார்’ என்ற அற்புத செய்தியும் சொல்லப்பட்டுள்ளது.
இயேசுவின் பிறப்புடன் சேர்த்து அவர் மனிதர்களுக்கு சான்றாவார் என்று சொல்லப்பட்டதிலிருந்து அவரை மாடலாக கொண்டு தந்தையின்றி உயிர்களை உருவாக்க முடியும் என்ற உண்மையை இயேசுவின் பிறப்பு வழியாக இறைவன் உலகிற்கு சொல்லி வைத்துள்ளான் என்பதை விளங்கலாம். (குர்ஆன் மட்டுமே இந்தச் செய்தியைச் சொல்கின்றது)
இயேசு குலோனிங் முறையில் தான் பிறந்தார் என்று நாம் அறுதியிட்டு கூறுவதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். அவர் மரபியல் வழியாகவோ அல்லது இன்னும் அற்புதமான முறையிலோ உருவாகி இருக்கலாம். நாம் சொல்லவருவது என்னவென்றால் உலகம் வியந்து பார்க்கும் ஒரு விஞ்ஞான மாற்றத்திற்கு இயேசுவின் பிறப்பு மிக சரியாக பொருந்தி போகிறது என்பதைதான்.
இயேசுவின் உள்ளே பொதிந்து கிடக்கும் இந்த சான்றுகளை இயேசுவிற்காக எழுதப்பட்டதாக நம்பப்படும் பைபிளின் எந்த பகுதியிலும் பார்க்கவே முடியாது. அவரது பிறப்பு ஒரு அத்தாட்சியாகும் என்ற வார்த்தைக் கூட பைபிளின் புதிய ஏற்பாடுகளில் இடம் பெறவில்லை.
குர்ஆன் மட்டுமே அவரது பிறப்பை உலகிற்கோர் சான்றாக்கி இன்றைய விஞ்ஞான யுகத்தை மெய்சிலிர்க்க வைத்துள்ளது என்பதை அன்பான கிறிஸ்த்துவ சகோதர – சகோதரிகள் உணர வேண்டும்.
இயேசுவின் அத்தாட்சி முடியவில்லை. பைபிளில் சொல்லப்படாத – குர்ஆனில் மட்டுமே சொல்லப்பட்டு உள்ளம் சிலிர்க்க வைக்கும் அவரது குழந்தைப் பருவ அற்புதங்களை அடுத்து பார்ப்போம்.
தொடரும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: