தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

குர்ஆன் மட்டும் பாதுகாக்கப்படுகின்றது?

Posted by tamilmuslim மேல் ஜூலை 3, 2007

குர்ஆன் மட்டும் பாதுகர்க்கப்படுகின்றது ஏன்?
வலைப்பூவை மேய்ந்துக் கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட ஒரு கேள்வி. ”விமர்சன விளக்கம்” என்ற வலைப்பூவில் இந்தக் கேள்வி கிடைத்தது. அந்த வலைப்பூவில் இந்தக்கேள்விக்கான பதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக சில விளக்கங்களுக்காக..
கேள்வி: இறைவன் அனைத்தையும் அறிந்தவன் என்றால் அவன் ஏன் முந்தைய வேதங்களைப் பாதுகாக்கவில்லை. எதற்காக ஒரு வேதத்தை இறக்கி பின்னர் அதை அழியவிட்டு அதன் பின்னர் மற்றொரு வேதத்தை இறக்க வேண்டும். அனைத்துக் காலத்திற்கும் ஏற்றவகையில் ஒரு வேதத்தை வடிவமைத்து இந்தகாலத்தில் நீங்கள் இதைப் பின்பற்றுங்கள். இந்தக் காலத்தில் நீங்கள் இதைப் பின்பற்றுங்கள் என்று மக்களுக்கு அறிவித்திருக்கலாமே..! என்பது கேள்வியின் முக்கியப்பகுதி.
சில அடிப்படைகளைப் புரிந்துக் கொள்ள வேண்டும். இஸ்லாம் என்பது மக்களை நம்பிக்கை என்ற வட்டத்தில் மட்டும் நிறுத்தி எது பற்றியும் சிந்திக்காதே.. மாற்றுக் கருத்துக் கொள்ளாதே.. கேள்வி கேட்காதே.. என்று முடக்கும் ஒரு மார்க்கம் அல்ல. சிந்தித்துப்பார், கேள்வி கேள், விவாதித்துத் தெளிவு பெறு என்று அழைப்புவிடும் ஒரு மார்க்கமாகும். இந்த இஸ்லாமியப் பார்வையை கவனத்தில் வைத்துக் கொண்டு கேள்வியை அணுகுவோம்.
மனித இனம் பூமியில் வாழத்துவங்கிய காலம் தொட்டே முரண்பாடுகள் தோன்றத் துவங்கி விட்டன. மனித அறிவின் பலவீனங்கள் முரண்பாடுகள் தோன்றுவதற்கும், அது வலுபெறுவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. இத்தகைய முரண்பாடுகளை நீக்குவதற்கும், மனித அறிவால் தெளிவு பெற முடியாதவற்றிற்கு வழிகாட்டுவதற்கும் இறைவனின் வழிகாட்டல் தேவைப்பட்டது. அந்த வழிகாட்டலை அவன் இறைத்தூதர்களுக்கு வழங்கி நீங்கள் வாழ்ந்துக்காட்டுங்கள். அதுதான் பிறருக்கு மாடல் என்ற வழியை ஏற்படுத்தினான். இறைத்தூதர்களுக்கு எது செய்தியாக அறிவிக்கப்பட்டதோ அது அவர்களுக்கு வாழ்க்கையாக அமைந்தது.
ஒவ்வொரு இறைத்தூதரும் மக்களுக்கு செய்தியை அறிவிக்கும் போது ‘சிந்தியுங்கள். இந்த செய்தியை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் உங்கள் சொந்த விருப்பத்தைப் பொருத்தது. ஏற்றீர்கள் என்றால் மரணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை இப்படி இருக்கும். ஏற்கவில்லை என்றால் நீங்கள் மரணத்திற்கு பிறகு இந்த வாழ்க்கையை சந்திப்பீர்கள்’ என்ற அடிப்படையில் தான் இறைச் செய்திகள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டன.
அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த சுதந்திரத்தை இறைவன் மிக நீண்டக் காலம் முழமையாக வழங்கினான். இந்த சுதந்திரம் அவர்களால் தவறாகவே பயன்படுத்தப்பட்டது. எந்த அளவிற்கென்றால் இறைவனின் வேதத்தை தங்கள் விருப்பத்திற்கு நாங்கள் மாற்றிக் கொள்வோம் என்ற அளவிற்கு அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை பயன்படுத்தினார்கள். இதற்கு பெரும் ஆராய்ச்சித் தேவையில்லை. கண்முன் கிறிஸ்த்தவர்கள் கைகளில் இருக்கும் பைபிள் இதற்கு தெளிவான சான்றாகும். இயேசு கொண்டு வந்து போதித்த சுவிசேஷங்களுக்கும் இன்றைய கிறிஸ்த்தவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் பைபிளுக்கும் தொடர்பில்லை எனும் அளவிற்கு அந்த மக்கள் தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்தி வேதத்தை மாற்றினார்கள். பவுல் என்பவர் இதில் பெரும் பங்கு வகித்தார்.
மனிதர்களுக்கு இறைவன் சுய சுதந்திரத்தை வழங்காமல் சட்டங்களை – வேதத்தை அவர்கள் மீது திணித்திருந்தால் அது அவர்களால் மாசுப்படுத்தப்படாமல் தான் இருந்திருக்கும். ஆனால் இறைவன் அதை ஒரு போதும் விரும்பவில்லை. அவனை ஏற்பதிலும் – அவன் சட்டங்களை ஏற்பதிலும் – அவன் வேதத்தை பாதுகாப்பதிலும் அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. சுதந்திரம் பாழ்படுத்தப்படும் போது என்ன கெடுதிகள் ஏற்படுமோ அது இறை வேதங்களுக்கும் ஏற்பட்டது பல வேதங்கள் வருவதற்கு இதுதான் அடிப்படைக் காரணமாக இருந்தது.
எனக்கு இந்தக் கொள்கைப் பிடிக்கவில்லை இதை ஏற்க மாட்டேன் என்பதற்கும், எனக்கு இந்தக் கொள்கைப் பிடிக்கவில்லை அதனால் நான் இந்தக் கொள்கையை மாற்றுவேன் என்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. முந்தைய சமுதாயம் குறிப்பாக அதன் தலைவர்கள் பிந்தையதை செயல் படுத்தினார்கள்.
முஹம்மத் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதம் ஏன் பாதுகாக்கப்பட்டது அப்படியானால் முஹம்மதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு சுய சுதந்திரம் வழங்கப்படவில்லையா… வேத வசனங்கள் திணிக்கப்பட்டதா… என்ற குறுக்கு விசாரணை இங்கு வரலாம். இறைவன் தனக்குத் தானே வகுத்துக் கொண்ட நியதியில் அவன் எந்த மாற்றமும் செய்துக் கொள்ள மாட்டான். மனிதர்களுக்கான சுய சுதந்திரம் என்பது முதல் மனிதருக்கு எப்படி வழங்கப்பட்டதோ அதே சுதந்திரம் உலகின் கடைசி மனிதருக்கும் உண்டு. இறைவன் அதை நிறைவாக வழங்கியுள்ளான். முந்தைய மக்களுக்கு என்ன அறிவிப்பு வழங்கப்பட்டதோ அதே அறிவிப்பு இன்றைக்கு குர்ஆனிலும் உண்டு. அதுதான் ‘இதை விரும்பியவர்கள் ஏற்கலாம், விரும்பியவர்கள் நிராகரிக்கலாம்’ என்பதாகும்.
முஹம்மத் அவர்கள் சந்தித்த அரேபிய மக்களுக்கு இறை வேதங்களை மாற்றும் மனப் பான்மை இல்லை. அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வந்த முதல் வேதம் இதுதான். (கடைசி வேதமும் இதுதான்) இறைவன் பிற பல்வேறு சமுதாயங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இறைத்தூதர்களை அனுப்பி வேதங்களை வழங்கி கவுரவித்த போதும் அவர்கள் அதை பாழ்படுத்தினார்கள். ஆனால் அன்றைய அரேபியர்கள் தமது சமுதாயத்திற்கு இறைவேதம் வந்துள்ளது என்றவுடன் அதைப் பாழ்படுத்த துணியவில்லை.
‘விரும்பியவர்கள் ஏற்கலாம், விரும்பியவர்கள் நிராகரிக்கலாம்’ என்ற சுதந்திரத்தில் முஹம்மத் அவர்கள் கொண்டு வந்த கொள்கையை சரியாக புரிந்துக் கொள்ளாதவர்கள் அதை நிராகரித்து வெளியில் நின்றார்களேத் தவிர இறை வேதத்தை மாற்றிக் கொள்வோம் என்ற முயற்சியில் யாரும் இறங்கவில்லை.
முஹம்மத் அவர்கள் இறைத்தூதராக இருக்க முடியுமா..? என்ற சந்தேகம் சிலருக்கு அன்றைய பொழுதுகளில் தோன்றிய போது அவரை இறைத்தூதர் என்று நிருபிக்கும் அசைக்க முடியாத ஒரே ஆதாரம் குர்ஆன் தான், எனவே அவர் விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொண்டால் இது போன்ற ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள் என்று முதலில் அவர்களுக்கு சவால் விடப்பட்டது. பின்னர் சவாலை மிக இலகுபடுத்தி முழு வேதத்தை கொண்டு வர முடியாவிட்டாலும் பரவாயில்லை இது போன்று சில வசனங்களையாவது கொண்டு வர முயற்சியுங்கள் என்று சொல்லப்பட்டு முஹம்மத் அவர்களின் இறைத்தூதுத்துவம் நிரூபிக்கப்பட்டது.
ஒரு வேதம் மாசுபடாமல் பாதுகாக்கப்படுவதற்கும், பாழ்பட்டுப் போவதற்கும் அந்த வேதம் வழங்கப்பட்ட மக்களே பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்ற உண்மையை புரிந்துக் கொண்ட எவரும் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக அரேபிய மக்களை கருத்தில் கொள்வார்கள்.
பொதுவாகவே பிற வேதங்களுக்கும் குர்ஆனுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் பிற வேதங்கள் அந்தந்தப் பகுதி அல்லது மொழி பேசும் மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால் குர்ஆன் முழு உலகுக்கும் இறைச் செய்தியை எத்தி வைக்கக் கூடிய பொது வேதமாகும். அதனால் அதன் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் தேவைப்பட்டது. அந்தப் பொறுப்பை இறைவன் தன் வசம் எடுத்துக் கொண்டான். ‘இந்த வேதத்தை நாமே இறக்கினோம் நாமே அதை பாதுகாப்போம்’ (குர்ஆன்) முந்தைய வேதங்களுக்கும் குர்ஆனுக்கும் வித்தியாசங்கள் இப்படித் துவங்குகின்றன.
முந்தைய வேதங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்கலாமே.. என்ற சந்தேகங்கள் தோன்றலாம்.
‘புதுப்பித்தல்’ என்பது நெருக்கடியையும், புதிதாக உருவாக்குதல் என்பது விசாலத்தையும் குறிப்பதாகும். ஒரு வீட்டை புதுப்பிப்பதற்கும், அதை இடித்து விட்டு விசாலமாக புதிதாக கட்டுவதற்கும் உள்ள வித்தியாசங்களை இங்கு முன் வைக்கலாம்.
முந்தைய வேதங்கள் பகுதிக்குட்பட்டதாக இருந்தது என்பதை முன்னர் குறிப்பிட்டோம். குர்ஆன் பகுதி என்ற அந்த எல்லை நீக்கப்பட்டு விசாலப்படுத்தப்பட்டதாகியது. விசாலமாக ஒரு உடை கிடைத்து விட்ட பிறகு கிழிந்துப் போன பழைய உடையை தைத்துப் போடுவது சிறந்தது என்று யாரும் கருத மாட்டார்கள்.
சட்டங்களில் மாற்றம்.
விசாலமாக இறைவன் குர்ஆனை கொண்டு வந்ததற்கு காரணம் முந்தைய வேதங்களில் இருந்த சட்ட நெருக்கடிகளையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு கொடுக்கப்பட்ட சட்டம் பொதுசட்டமாக ஆக வேண்டுமானால் அதற்கு மிகப் பொருத்தமான காரணங்கள் இருக்க வேண்டும். சீக்கியர்கள் குறுவாள் வைத்துக் கொள்ளலாம் என்பது ஒரு பகுதிக்கான அல்லது ஒரு இனத்தவருக்கான சட்டம். இதை உலகின் பொதுசட்டமாக ஆக்க வேண்டும் என்று கூற முடியாது, அவ்வளவு ஏன் இந்தியாவிற்குள்ளேயே இதை பொதுசட்டமாக கொண்டுவாருங்கள் என்று சொல்ல முடியாது. சொல்பவர்கள் நிச்சயம் சட்டத்தையும், கலாச்சாரத்தையும், இடங்களையும் பற்றிய அறிவில்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.
காலகட்டத்திற்கு ஏற்ப பல சட்டங்களை முந்தைய வேதங்களில் வகுத்த இறைவன் காலகட்டங்களில், சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டவுடன் அதற்கு ஏற்ப சட்டங்களை கொண்டு வந்தான்.
இறைவனுக்கு பிந்தைய காலம் பற்றிய அறிவில்லையா… அவன் அனைத்தையும் அறிந்தவன் என்றால் பிந்தைய காலகட்டத்திற்குரியவற்றையும் முன்னரே கூறி இருக்கலாமே.. என்ற கேள்வி அவ்வப்போது பலரால் முன் வைக்கப்படுகின்றது.
தன்னை சிந்தனைவாதி என்று எண்ணிக் கொள்பவர்கள் சற்றும் பொருத்தமில்லாத கேள்விகளை எப்படித்தான் வைக்கிறார்களோ என்பது உண்மையில் வருந்தத்தக்கதுதான்.
ஒரு தாய் தனது ஒரு வயது குழந்தைக்கு மென்மையான உணவுகளை கொடுக்கிறாள் என்றால் அவளுக்கு அந்த குழந்தை வளர்ந்தப் பிறகு கடின உணவு உண்ணும் என்ற அறிவு இல்லை என்று யாரும் கூறுவார்களா… பிற்காலத்தில் குழந்தை உண்ணும் என்பதற்காக அதன் ஒரு வயதிலேயே எல்லா உணவுகளையும் வாங்கி பாதுகாத்து வைப்பாளா…
நிச்சயம் அந்த தாய்க்கு தன் குழந்தை பிற்காலத்தில் என்ன உணவு உண்ணும் என்பது தெரியும் ஆனாலும் இன்றைக்கு அந்த உணவை கொடுக்கவும் மாட்டாள் அதை வாங்கி பாதுகாக்கவும் மாட்டாள். இறைவனுக்கு அனைத்தும் தெரிந்தாலும் அவன் சூழ்நலைக்கு தகுந்த சட்டங்களைத்தான் மக்களுக்கு வழங்குவான். நடைமுறைக்கு சாத்தியமில்லாதவற்றை வழங்கி சடங்காக வைத்துக் கொள்ள வழிகாட்டமாட்டான்.
எனவே,
முந்தைய மக்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் அவர்களால் பாழ்படுத்தப்படதாலும்,
முந்தைய வேதங்கள் சில பகுதிகள் – சில மக்கள் என்று குறிப்பிட்ட நிலையை கொண்டிருந்ததாலும்,
அரேபியர்கள் இறை வேதத்தை பாதுகாப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்கள் என்பதாலும்,
குர்ஆன் மட்டும் பாதுகாக்கப்படுகின்றது?
குர்ஆன் முழு உலகிற்கும் பொது சொத்தாக விசாலப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருந்ததாலும்,
சூழ்நிலைகளும் – காலகட்டங்களும் பெருமளவு மாறி விட்டதாலும்,
முந்தைய வேதங்கள் முடிவுக்கு வந்து புது வேதமாகவும் – உலக வேதமாகவும் – இறுதி வேதமாகவும் குர்ஆனை இறைவன் வெளிபடுத்தி அதை பாதுகாத்து வருகிறான்.
பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: