தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

முஸ்லிம்களின் இறைவனா..

Posted by tamilmuslim மேல் ஜூலை 3, 2007

அல்லாஹ் முஸ்லிம்களின் இறைவனா..
ஜி.நிஜாமுத்தீன் – பரங்கிப்பேட்டை
வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவும் இல்லை’ என்றக் கொள்கையை ஏற்று அதன் படி வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களின் தொகை உலகில் இருநூறு கோடிகளுக்கும் மேல். இந்தக் கொள்கையை மனதால் ஏற்று தன் நிலையை மாற்றிக் கொள்ளா விட்டாலும் இந்தக் கொள்கை சரியானதுதான் என்று கருதுபவர்களும் கோடிக்கணக்கில் உள்ளனர்.
‘வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவுமில்லை’ என்ற கொள்கையை நாம் அரபு மொழியில் மொழிபெயர்த்தால் ‘லா இலாஹ இல்லா அல்லாஹ்’ என்று வரும். இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் ‘முஸ்லிம்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார். முஸ்லிம் என்ற அரபு வார்த்தையை தமிழ்படுத்தினால் ‘கட்டுப்பட்டவர்’ என்று பொருள் வரும்.
இந்தக் கொள்கையாளர்கள் தங்கள் வணக்கங்களிலும், தங்கள் இறை நினைவுகளிலும், அந்தக் கொள்கையைப் பற்றிப் பேசும் போதும் அந்தக் கொள்கையின் அரபு வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். அந்த வார்த்தையில் ‘அல்லாஹ்’ என்ற பதம் வருவதால் அல்லாஹ் என்ற அந்தக் குறியீடு தனிக் கடவுளை குறிக்கும் ஒரு சொல் என்றும், முஸ்லிம்கள் தனிக் கடவுளை ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் பிறர் விளங்கிக் கொள்கின்றனர்.
பல்வேறு மொழிகள் வழக்கிலுள்ள ஒரு நாட்டில் அவர்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு மொழியின் வார்த்தை ஒரு சாரார் பயன்படுத்தப்படும் போது அது வேறுவிதமான உணர்வுகளை ஏற்படுத்தவே செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை.
கிறிஸ்த்தவர்கள் வணங்கும் இயேசுவைப் பொருத்தவரை மொழிக்கு ஏற்றார்போல அந்த வார்த்தை மாற்றப்பட்டு புழக்கத்திற்கு வந்து விட்டது. ஆங்கிலத்தில் ஜீஸஸ் என்றும், அரபுவில் ஈஸா என்றும், தமிழில் இயேசு என்றும் இடத்திற்கு தகுந்தார்போல அவரது பெயர் மாற்றப்பட்டு விட்டதால் கிறிஸ்த்தவர்கள் இயேசுவென்று தமிழில் குறிப்பிடும் போது பிறர் அதை பளிச்சென்று புரிந்துக் கொள்கிறார்கள். முஸ்லிம்களைப் பொருத்தவரை அவ்வாறு எல்லா சந்தர்பங்களிலும் அல்லாஹ் என்பதை மொழியாக்கம் செய்வதில்லை. (இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன) அல்லாஹ் என்றே குறிப்பிடுவதால் அல்லாஹ் என்பது ஒரு இணத்தின், ஒரு கொள்கையின் கடவுளை குறிக்கும் சொல் என்ற நிலையைப் பெற்று விட்டது.
இது வருந்தத்தக்க ஒன்றுதான், ஏனெனில் ஒரு மொழியில் பலவீனம் அல்லது மொழி இடைவெளிகளின் காரணத்தால் மிகப் பெரிய ஒரு பொதுக் கொள்கை தவறாக புரியப்படுவது வருந்தத்தக்கதுதான். இந்த தவறான புரிதல் அக்கறையுள்ள முஸ்லிம்களின் மீது கூடுதலான விளக்கும் சுமையை? ஏற்படுத்தியுள்ளது.
‘மிகப் பெரியக் கொள்கை’ அலட்சியப்படுத்தாமல் பரிசீலியுங்கள்.
‘அல்லாஹ்’ என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் ‘இலாஹ்’ என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது வேர் சொல்லாகும். இதற்கு ‘வணங்கப்படும் கடவுள்’ என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும்.
இந்த வரலாற்றை விளங்கிய யாரும் அல்லாஹ் என்பது இஸ்லாமிய கடவுளுக்குரிய ஆடையாளமல்ல என்பதை புரிந்துக் கொள்வர். ஏனெனில் இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும்.
பெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைப்பெற செய்தது. ”பலக் கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா.. இது ஆச்சரியமான ஒன்றுதான் என்று (அந்த அரபு மக்கள்) கூறினர். (அல் குர்ஆன் 38:5)”

இதுதான் உண்மையே தவிர பிறர் நினைத்துக் கொண்டிருப்பது போன்று இஸ்லாம் புதிதாக அல்லாஹ் என்று ஒரு இறைவனை உருவாக்கிக் கொடுக்கவில்லை.
புரிந்துக் கொள்வதற்காக ஒரு உதாரணம் கூறலாம். ஒருவேளை முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் அரபு தேசத்தில் இல்லாமல் தமிழகத்தில் – தமிழ் மொழியில் வெளிப்பட்டிருந்தால் இங்கு நிலவி வந்த பல இறைக் கொள்கையை சீர் திருத்தி ஒரே இறைவன் என்ற அந்த மாபெரும் சக்தியை புரிய வைத்து அதன் பக்கம் மக்களை மீட்டெடுத்திருப்பார். அப்போது அவரது கொள்கை அரபுவில் மொழி பெயர்க்கப்பட்டால் தமிழில் முஹம்மத் அவர்கள் யாரை இறைவன் என்று குறிப்பிட்டார்களோ அது அரபுவில் அல்லாஹ் என்று மொழி பெயர்க்கப்படும். இதிலிருந்து அல்லாஹ் என்பது தனிக் கடவுளை குறிக்கும் சொல் அல்ல மாறாக பொதுக் கடவுளை குறிக்கும் சொல் என்பதை விளங்கலாம்.

தமிழில் பிரம்மன், விஷ்னு, முருகன் என்று குறிப்பிடப்படும் அந்த சொற்களுக்கும், இறைவன், கடவுள் என்று குறிப்பிடப்படும் அந்த சொற்களுக்கும் உள்ள வித்தியாசத்தை எவரும் விளங்கலாம். முந்தைய சொற்கள் தனிப்பட்டதையும் பிந்தைய சொற்களான இறைவன், கடவுள் என்பது பொது சக்தியையும் குறிப்பதாக எப்படி விளங்கிக் கொள்கின்றோமோ அதைப் போன்று தான் அல்லாஹ் என்பதும் எல்லோருக்கும் பொதுவான அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு போது இறைவனைக் குறிக்கும் ஒரு அரபு சொல்லாகும். அதனால் தான் பொதுக்கடவுளை ஏற்றுக் கொண்ட அரபு மொழி பேசக் கூடிய யூதர்கள், கிறிஸ்த்தவர்கள் கூட இறைவனை அல்லாஹ் என்றே குறிப்பிடுகிறார்கள்.

இஸ்லாம் எந்த ஒரு தனிக் கடவுள் கொள்கையையும் வகுக்கவில்லை மாறாக அது எடுத்தக் காட்டுவது பொதுக் கடவுள் கொள்கைதான் என்பதை சந்தேகமற விளங்க வேண்டும். பின்னர் சற்று அது கூறும் அந்தக் கொள்கையின் உள்ளே நுழையுங்கள்.
பகுத்தறிவே உலக புரட்சியின், வளர்ச்சியின் அடையாளம் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. படிப்பும், சிந்தனையும், அனுபவமும் பகுத்தறிவை தூய்மைப்படுத்தி மனிதனை விசாலமாக்குகின்றது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள தனது பகுத்தறிவை முழு வீச்சில் பயன்படுத்தும் மனிதன் தனது கடவுள் கொள்கைக்கு மட்டும் அதைப் பயன்படுத்தாமல் நம்பிக்கை என்ற பெயரில் பகுத்தறிவிலிருந்து விலகி நிற்பது விந்தையாக இருக்கின்றது.
சக்தியும் – வடிவமும்.
பொதுவாக சக்தி அல்லது ஆற்றல் போன்றவற்றை வடிவப்படுத்தி மனிதன் அனுபவிப்பதில்லை. காற்று என்பது ஒரு ஆற்றல். அதை அனுபவிக்க காற்றுக்கு உருவம் வேண்டும் என்று எந்த மனிதனும் முடிவு செய்வதில்லை. ஒளி என்பது ஒரு சக்தி. ஒளிக்கு உருவம் வடிவம் கொடுத்தால் தான் அதை புரிந்துக் கொள்ள முடியும் அனுபவிக்க முடியும் என்று எந்த அறிவும் நம்பிக்கையும் கூறுவதில்லை. வெப்பம் என்பது கூட ஒரு சக்தி. அதை உருவப்படுத்தி அனுபவிக்க வேண்டும் என்று எந்த மனிதனும் சொல்லவில்லை. ஆனால் கடவுள் என்ற சக்தி அனுபவிக்க மனிதன் விரும்பியவாறெல்லாம் உருவப்படுத்திக் கொள்கிறான். பிற இறைக் கொள்கையில் உள்ள பலவீனங்களில் ஒன்று கடவுளை உருவப்படுத்துவது. (இறைவன் உருவமற்ற வெறும் சூனியம் அல்ல. இறைவன் அவனுக்கே உரிய உருவ அமைப்போடு இருக்கிறான். அவனது உருவத்தை யாரும் இதுவரை கண்டதில்லை என்பதால் இந்தப் பரம்பொருளை உருவப்படுத்தக் கூடாது என்று இஸ்லாம் சொல்கின்றது)
மனித கற்பனை, கடவுளை கொச்சைப்படுத்தலாமா..?
ஆன்றோர்கள் முதல் சான்றோர்கள் வரை எவருமே கடவுளை கண்களால் கண்டதில்லை என்பதால் தான் கடவுளாக கருதப்படும் வடிவங்கள் பெருத்த அவலங்களைப் பெற்றுள்ளன. கடவுளாக கருதப்படும் சிலைகளை பற்றி சிந்திக்கும் எந்த அறிவும் இது கடவுளை கொச்சைப்படுத்தும் போக்கு என்பதை விளங்கும்.
மனிதன் அவனுக்குத் தேவையானவற்றை மிக்க அழகுடன் வடிவமைக்கவே விரும்புகிறான். வீடு கட்ட விரும்பும் எந்த மனிதனும் கற்களை அடுக்கி கட்டி விட்டால் போதும் வீடாகி விடும் என்று முடிவு செய்வதில்லை. பொறியியளாளர்களின் ஆலோசனைப்படி வீட்டை அழகுற அமைக்கிறான். ஒரு ஓவியன் தனது ஓவியத்தை அசிங்கமாகவும் அவலட்ஷனமாகவும் வரைய விரும்புவதில்லை. புகைப்படக்காரர்கள் பார்த்தவுடன் முகம் சுலிக்கும் விதத்தில் அகோரமான புகைப்படங்கள் எடுப்பதில்லை. அவனது தேவைகளுக்காக அழகுணர்ச்சியை நாடும் மனிதன் கடவுளை கற்பனை செய்யும் போது மட்டும் எவ்வளவு கேவலமாக அதை வடிவமைத்துக் கொள்கிறான் என்பதை பார்க்கும் போது சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.
ஒன்றுக்கு மேற்பட்ட தலைகள், இரண்டுக்கும் மேற்பட்ட கரங்கள், மிருகங்களுக்குள்ள கோறப்பற்கள், யானைத்தலையும் பெருத்த தொப்பையும் கொண்ட உருவம். கருத்த, தடித்த நிறத்தில் பயங்கர உருவங்கள் என்று எத்துனை வித அகோரங்கள்!.
தனது குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கைகளுடன் குழந்தை பிறந்தால் கடவுளின் வடிவம் என்று அதை ஆபரேஷன் செய்யாமல் விட்டு விடுவார்களா..? கோரப் பற்களுடன் குழந்தைப் பிறந்தால் அதைக் கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவார்களா..? இறைவனாக கருதப்படும் உருவங்களுக்கு ஏன் இந்த அவலங்கள்!
மேல் தட்டு மக்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஒரு சாரார் வழிபடும் சிலைகளிடம் இத்தகைய அகோரங்கள் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். தாழ்ந்த மக்களாக அவர்கள் கருதுபவர்களின் சிலைகளின் வடிவங்கள் கூட தாழ்ந்தவைகளாகவே இருக்க வேண்டும் என்ற ஜாதிய வெறிப்பாடே இவற்றிற்கு காரணம்.
இறைவன்(அல்லாஹ்)வாகிய அவனுக்கு இந்த அவலட்சனங்கள் இல்லை.
தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் அது சிலையா..?

கல்லை கடவுளாக உருவப்படுத்திக் கொள்பவர்கள் அதை நியாயப்படுத்த இப்படிக் கூறுவதைப் பார்க்கிறோம். சாதாரண நடைமுறைக்கு கூட சாத்தியமில்லாத தத்துவத்தை மகாப் பெரிய பொதுக் கடவுள் கொள்கைக்கு பொருத்திப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. அறிவாளிகளால் இதை எப்படி சரிகாணமுடியும் என்பதும் விளங்கவில்லை.
இந்தத் தத்துவத்தை சரிகாண்பவர்களின் வீட்டை ஒருவன் பார்த்து ‘இது உன் வீடென்றால் உன் வீடு, என் வீடென்றால் என் வீடு’ என்று கூறினால் மிக அழகான தத்துவம் அதனால் நீ விரும்பினால் இந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாடு’ என்று சொல்வார்களா..? சிலைகள் என்றைக்கும் சிலைகளாகத்தான் இருக்கும் அவை ஒரு போதும் தன் நிலையிலிருந்து உயர்வுப் பெறாது. வேண்டுமானால் நாளடைவில் அது தனது புதிய பொலிவை இழக்கலாம் அதைத்தவிர வேறெந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஊனமான பல சிலைகள் ஆங்காங்கே கேட்பாரற்று கிடப்பதைக் கூட பார்க்க முடியும். வித விதமாக பல சிலைகளை வடிவமைத்து தூக்கி ஆடிபாடி கடலில் கரைத்து விட்டு கடவுளை கண்ணியப்படுத்தி விட்டதாக மகிழ்கிறார்கள். உண்மையான இறைவனை இப்படியெல்லாம் செய்ய முடியுமா…? அல்லாஹ் என்ற அந்த இறைக் கொள்கை இவற்றிர்க்கெல்லாம் அப்பாற்பட்டதாகும்.
சிந்தனையின் அடுத்தக்கட்டத்திற்கு நகருங்கள்.
ஏன் பல இறைவர்கள் வேண்டும்?எதற்காக, எந்த அடிப்படையில் இந்த மக்கள் பலக் கடவுள்களை நாடுகிறார்கள் அதற்கு என்ன அவசியம் என்பதும் பரிசீலிக்க வேண்டிய ஒன்றாகும்.
உயர்ந்த மனிதன்! தாழ்ந்தக் கடவுள்!!
திறமைமிக்க எந்த ஒரு மனிதனும் தன் திறமை தனித்துவத்துடன் வெளிப்படுவதையே விரும்புவான். தனது திறமையையும், உழைப்பையும், உலகம் மிகச் சரியாக கண்டுணர வேண்டுமானால் தாம் தனித்துவத்துடன் வெளிப்படவேண்டும் என்றே ஆசைப்படுவான். அப்படி வெளிப்பட்டவர்கள் தான் உலகில் மிளிர்கிறார்கள்.மிகச் சிறந்த, திறமைவாய்ந்த ஒரு கட்டிடப் பொறியாளர் தன்னுடைய திறமையால் ஒரு கட்டிடம் உயர்வதையே விரும்புவார். கூட்டு வைத்துக் கொண்டு தனது திட்டத்தை உருவாக்க மாட்டார். புகழ் மிக்க ஓவியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் யாராவது கூட்டாக ஓவியம் வரைந்து அந்தப் புகழை அடைந்தார்களா..? இப்படி நூற்றுக்கணக்கான உதாரணங்கள் கூறலாம். பலவீனங்கள் அடங்கிய மனிதனே ஒற்றையில், ஒற்றைப்பாட்டில் இத்துனை உயர்வுப் பெறும் போது பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் மட்டும் எப்படி ஒன்றுக்கு மேற்பட்டு இருக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இறைவனைக் கற்பனை செய்பவர்கள் மனிதனின் ஆற்றலை விட கடவுளின் ஆற்றல் குறைந்தது என்று எண்ணுகிறார்களா..?
சீர்மை சிதையும் என்பது உறுதி.
முழு உலகையும் நீங்கள் உங்கள் சிந்தனை திரையில் கொண்டு வந்து விரியுங்கள். எந்த நாட்டிலாவது சம அதிகாரம் பெற்ற இரண்டு ஜனாதிபதிகள், இரு பிரதமர்கள் இருக்கிறார்களா…! அரசுத் துறைகள் எதுவொன்றிலும் சம அதிகாரம் பெற்ற அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்டு பணியாற்றுகிறார்களா…? ஒன்றுக்கு மேற்பட்ட இறைவர்கள் இருந்தால் என்ன தவறு என்று கேட்பவர்கள். இந்தக் கேள்விகளையும் தங்களுக்குத் தாங்களே சற்றுக் கேட்டுப் பார்க்கட்டும். ஒரு நாட்டிற்கு இரு பிரதமர்கள், இரு ஜனாதிபதிகள் இருந்தால் என்னத் தவறு?பள்ளிக் கூடங்களுக்கு, கல்லூரிகளுக்கு இரு தலைமை ஆசிரியர்கள் இருந்தால் என்னத் தவறு? ஒரு வீட்டுக்கு இரு குடும்பத்தலைவர்கள் இருந்தால் என்னத்தவறு? இங்கெல்லாம் இருமை இருந்தால் என்னத் தவறு ஏற்படுமோ அதை விட பயங்கரம் இருக் கடவுள்கள் இருந்தால் ஏற்படும். இதை இறை வேதமாகிய குர்ஆன் இப்படிக் கூறுகிறது.வானங்கள், பூமி ஆகியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டுக் கடவுள்கள் இருந்திருந்தால் அவை சீர்கெட்டு சின்னாபின்னமாகி இருக்கும். இது மறுக்க முடியாத உண்மை. எதுவொன்றும் ஒரே சீராக இயங்கவேண்டுமானால் அது ஒரு அதிகாரத்திற்குட்பட்டிருக்க வேண்டும். நாடும் வீடும் சிறக்க ஒருமையே சரியானத் தீர்வு எனும் போது மொத்த உலகிற்கும் எப்படி ஒன்றுக்கு மேற்பட்டக் கடவுளைக் கற்பனைச் செய்கிறீர்கள்?
பலவீனங்களே கூட்டாச்சியைப் பற்றி சிந்திக்கும்.
ஒரு பெரியக் காரியத்தை சாதிக்க முற்படுபவர்கள் அதற்கான சக்தி தங்களுக்கு இல்லை என்றால் தங்களைப் போன்றவர்களை ஒருங்கிணைத்து அந்தக் காரியத்தை சாதிப்பார்கள். இன்றைக்கு நடக்கும் கூட்டாச்சிகளை இதற்கு உதாரணம் கூறலாம். ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை தங்களுக்கு இருந்தாலும் அதற்கான தகுதி தங்களிடம் இல்லை என்பதால் பிறரை நாடி கூட்டணி வைத்துக் கொண்டு நாடியதை சாதிக்கிறார்கள். (இந்தக் கூட்டணிகளில் பிரச்சனை உருவாகி முட்டி மோதிக் கொள்வது தனி விஷயம்)இப்போது சிந்தியுங்கள். இறைவர்களும் கூட்டாச்சி நடத்த வேண்டுமென்றால் இறைவர்களிடமும் மனித பலவீனங்கள் இருக்கின்றனவா..? இப்படி சிந்திப்பது கடவுளை பலவீனப்படுத்துவதாகாதா…? பலவீனத்திற்குட்பட்டவ(ர்)ன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? பல கடவுள் சித்தாந்தக்காரர்கள் நிதானமாக இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையான அந்தப் பரமசக்தி (அல்லாஹ்)க்கு எத்தகைய கூட்டு இறைவர்களும் தேவையில்லை. ஏனெனில் அவன் அனைத்து பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டவன்.
பல கடவுள்கள் – பல மனிதர்கள்.
ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் கலந்து ஒரு மனிதன் உருவாகின்றான். அந்த உருவாக்கம், கருவரையின் குடியிருப்பு, பிறக்கும் முறைகள், பால்யப் பருவம் என்று உலகில் பிறக்கும் கோடானக் கோடி குழந்தைகளும் ஒரே விதத்தில் பிறக்கும் போது பின்னர் ஜாதியம் என்ற கொடிய நோய் அந்தக் குழந்தையோடு வந்து ஒட்டிக் கொள்கின்றது. மிக சொர்ப்பமானவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள், அதிகமானவர்கள் தாழ்ந்தவர்களாகின்றார்கள். மனிதத்துவம் சிதைந்து ஏற்றத்தாழ்வு உருவாகி நிலைப் பெற்று விட்டது. இதற்கு என்னக் காரணம்? பலக் கடவுள் கொள்கையே இந்த ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி விட்டது. இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி பலக் கடவுள் கொள்கையை கைக் கழுவுவதேயாகும்.
விண்ணுலகம், மண்ணுலகம் என்று அனைத்துலகத்திற்கும் ஒரே இறைவன் என்ற நிலை வரும் போதுதான் அவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சம அந்ததஸ்த்துள்ளவர்களாவார்கள். அதை மிக வலுவாக உலகில் நிலை நிறுத்திக் காட்டியது இஸ்லாம் ஒன்றுதான்.
மனித சகோதரர்களே.. கூண்டுகளிலும், முட்களிலும் சிறைப்பட்டு கிடக்கும் உங்கள் சிந்தனைச் சிறகுகளை அவற்றிலிருந்து விடுவித்து சற்று அகலமாக விரித்து பறக்க முயலுங்கள். அகன்ற வானவீதி அனைத்தையும் ஆளும் அந்த மகா இறைச் சக்தி உங்களுக்குப் புலப்படும். கடுகளவுக் கூட பலவீனமில்லாத அந்த மகா இறைச் சக்தியே உண்மையான இறைசக்தி.
அந்த இறைவன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியவனல்ல. அவனே அனைத்துலகுக்கும் சொந்தமானவன். அந்த மகா சக்தியை அரபுமொழியில் ‘அல்லாஹ்’ என்று குறிப்பிடுகிறோம். இறைவன் என்று குறிப்பிடுங்கள், கடவுள் என்று குறிப்பிடுங்கள் அதில் எந்தத் தடையும் இல்லை. மனிதக் குலம் விடுதலைப் பெற வேண்டுமானால் அந்த ஓரிறைக் கொள்கைக் குறித்து சிந்திப்பது ஒன்றே சரியான வழியாகும். இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் பக்கம் உங்களை அழைக்கின்றோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: