தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சவால்கள்.

Posted by tamilmuslim மேல் ஜனவரி 7, 2008

இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சவால்கள். (முழு புத்தகம்)

ஆன்மீகத்தை மட்டும் போதிக்காமல் அதையும் கடந்து முழு மனித சமுதாயமும் சுபிட்சம் பெற்று வாழத்தேவையான அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டி நடாத்திச் செல்லும் மார்க்கமே இஸ்லாம். பகுத்தறிவும் பதில் சொல்லத் திணறும் இன்றைய நவீனகால சிக்கல்களுக்கும் மிக எளிதானத் தீர்வுகளை விளக்கிச் சொல்லும் மார்க்கமே இஸ்லாம். இம்மார்க்கத்தின் மீது எல்லாக் காலக்கட்டங்களிலும் பலமுனை தாக்குதல்கள் இருந்தே வந்திருக்கின்றன இன்னும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்தாக்குதலில் ஒன்றுதான் இன்றைய நவீனகாலத்து மருத்துவமுறை. இம்முறையைப் பற்றி மத்திய காலத்தை கடந்து விட்ட மதமான- மார்க்கமான இஸ்லாம் அறிந்து வைத்திருக்க வாய்ப்பேயில்லை? என்ற அவசர முடிவுக்கு வந்தவர்களுக்கு சகோதரர் ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் வரைந்த ‘இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சாவல்கள்’ என்ற சிறிய நூலில் இஸ்லாம் மத்தியகாலத்தையும் கடந்து அது எல்லாக்காலங்களிலும் வழிகாட்டியே வந்த- இனிவரும் காலத்திலும் வழி நடத்திச் செல்லும் ஒரே இறை மார்க்கம் என்பதை இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களைக் கொண்டு வெளிச்சம் போட்டு விளக்கியுள்ளார். இதுதான் இஸ்லாம் இணைய வாசகர்களுக்கு அதை அப்படியே வழங்குகிறோம்.

(இந்நூல் மீதான கருத்தோட்டங்கள் மற்றும் விமர்சனங்களை வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்)

இணையக்குழு.

இதுதான் இஸ்லாம்.காம்

…………………………………………….

”இஸ்லாம் சந்திக்கும் நவீன மருத்துவ சவால்கள்” என்கிற பொருளிலும் அதே தலைப்பிலும் எழுதப்பட்ட ஒரு நூலை ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அன்று முதல் இந்நூல் மீது ஒரு தாகம் ஏற்பட்டது. காரணம், அனைவருமே வியந்து நிற்கிற அளவுக்கு வளர்ந்து வரும் விஞ்ஞானத்தில் அதிக வளர்ச்சியை- ஆய்வை மருத்துவத்துறையே பெற்று வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் புரட்சிகரமாகவும் புதுமையாகவும் வெளிப்படுகிற மருத்துவயியலின் கண்டுபிடிப்புகளுக்கு இஸ்லாத்தில் வழியோ வரவேற்போ இருக்கிறதா? என்றொரு கேள்வி முஸ்லிம்களிடமும் முஸ்லிம் அல்லாதவர்களிடமும் இஸ்லாத்தை அறிந்தவர்களிடமும் அறிய வேண்டியவர்களிடமும் இல்லாமல் இல்லை.

இக்கேள்விக்கான விடையை சமூகத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டிய கடமை சத்தியவாதிகளான அழைப்பாளர்களுக்கே அதிகமுண்டு. அவ்வகையில் இதுவொரு ”அழைப்பாளனின் நூல்” எல்லாப்புகழும் இறையொருவனுக்கே.

மனிதனோடு அறிவியல் அன்மிக்கொண்டிருக்கிற காலமெல்லாம் மதம்- ஆன்மீகம் அவனை விட்டு அப்புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு உதாரணம் பாருங்கள், கடலைக்கடப்பது பாவம் கூடாது என்றது ஒரு மதம் போதித்த நீதி. அந்தக் கைவிலங்குக்கு கட்டுப்பட்டு உட்கார்ந்திருந்தால் ஒரு கிழமையிலிருந்து இன்னொரு கிழமைக்குள் செவ்வாய் கிரகமே சென்றுவிடும் சாதனை சாத்தியப் பட்டிருக்குமா? ஆகவேதான் மனித அறிவின் முன்னேற்றத்திற்கு பெரும் பின்னடைவாக இருந்த மதம் அன்று அறிவியலுக்கு எதிர்ப்பதமாக அறிவு இல்லாத இயலாகக் கருதப்பட்டது.

ஆனால் இஸ்லாம் அவ்வாறில்லை நவீன விஞ்ஞானத்தின் எந்தத்துறைக்கும்- அவற்றின் கண்டுபிடிப்புகளுக்கேற்பவும்- அதனதன் சாதனைகளையும் இஸ்லாம் பொருத்திக் கொண்டும் தன்னுள் பொருந்திக் கொண்டுமே வந்துள்ளது என்பது வரலாற்று உண்மை. ஆகவே அறிவியலுக்கு எதிர்ப்பான சித்தாந்தங்களைக் கொண்டுள்ள மற்ற மதங்களைப்போல் இஸ்லாத்தையும் எடைபோட்டு விடக்கூடாது. அறிவியலின் எந்த சாவல்களையும் இஸ்லாத்தில் அலசி ஆராய்ந்துப் பார்த்து நேர்வழி கண்டு தெளிய வேண்டும் என்கிற நன்னோக்கில் தான் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.

”இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சவால்கள்” என்கிற தலைப்பை தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிற ஆசிரியர் அவற்றுள் முதலாவதாக அறுவை சிகிச்சையைக் குறித்திருப்பது வியப்பையே அளிக்கிறது. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் முன்னுதராணமாக ஆசிரியர் விவரித்துள்ளார். எனினும் நாமறிந்தவரை அறுவை சிகிச்சை என்பது ஒரு நவீன சாதனையல்ல மாறாக பண்டைய இந்தியாவிலேயே சுஸ்ருதா போன்ற மருத்துவ அறிஞர்கள் இத்துறையில் சிறந்து விளங்கினார்கள் என்கிறது வரலாறு.

அதே சமயம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு நவீன மருத்துவ சாதனைதான் அதற்கும் நபிகளாரின் வாழ்வில் நடந்த இந்தச்சம்பவம் இடமளிக்கிறது என்பது உணர்ந்து அறியப்பட வேண்டியதொன்று. ”ஒரு உயிரை வாழ வைப்பவன் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவனைப் போன்றவனாவான்” என்கிற திருமறைக்குர்ஆனின் குரலைச் சுட்டிக்காட்டி கண்தானம் சிறுநீரகதானம் இரத்ததானம் ஆகியவற்றுக்கான இஸ்லாத்தின் அங்கீகாரத்தையும் ஊக்குவிப்பையும் இந்நூலில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

”அல்குர்ஆனில் தடுக்கப்பட்ட உணவுகளின் பட்டயலில் இரத்தமும் உள்ளதே ஆகவே இரத்ததானம் பெறுவதும் தருவதும் கூடுமா?” என்று குழம்பித் தவிப்பவர்களுக்கு தெளிவு தரும் விதமாக இரத்தத்தை உணவாகத்தான் பயன்படுத்தத்தடையே தவிர உயிர்காக்க தாராளமாகப் பயன்படுத்தலாம் என்று மேற்கண்ட இறைவசனத்தின் அடிப்படையில் உரத்துக் கூறுகிறது இந்நூல்.

டெஸ்ட் டியூப் பேபி என்கிற சோதனைக்குழாய் குழந்தை குறித்து இஸ்லாத்தின் நிலைபாடுகளை எல்லாக்கோணங்களிலும் இந்நூல் அலசி ஆராய்கிறது. சோதனைக்குழாய் வழிக் குழந்தை பெறுவதில் உலகில் நான்கு விதமான வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அவற்றை இந்நூல் விரிவாக அலசுகிறது. கணவனல்லாத அடுத்த ஆணுடைய விந்தணு மூலம் சோதனைக்குழாய் குழந்தை பெறுவதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்பதை காரண காரியங்களுடன் இந்நூல் விளக்கும்… அதேசமயம் இயல்பிலேயே குழந்தை பெறும் வாய்ப்பு குறைந்து காணப்படுகிற தம்பதியர் தம்தம் உயிரணுக்களைக் கொண்டே சோதனைக்குழாய் முறையில் குழந்தைப் பெறுவதற்கு தடையில்லை என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. மனைவியிடம் கருமுட்டை திறனிலோ உற்பத்தியிலோ குறை காணப்படின் மனைவியல்லாத மற்றொரு பெண்ணிடமிருந்து (திருமண உறவுக்குத் தடையில்லாத பெண்ணிடம்) கருமுட்டை தானம் பெற்று மனைவியின் கருவறையில் வைத்துக் குழந்தைப் பெற்றுக்கொள்ளவும் நிபந்தனைகளுக்குட்பட்டு தடையில்லை என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. சோதனைக்குழாய் வழிக் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ள முஸ்லிம்கள் பேணவேண்டிய ஒழுங்கு முறைகளையும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுருங்கக்கூறின் முறையான பெற்றோர்களின் உறவுகள் கேள்விக்குறியாகாத வண்ணமே சமூக சிக்கல்களும் சட்ட சிக்கல்களும் ஏற்படா வண்ணமே சோதனைக்குழாய் குழந்தைகளை இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதை தர்க்க வாதத்தின் மூலமாகவே இந்நூல் தெளிவுபடுத்தி விடுகிறது.

கருவறையில் படிப்படியாக நிகழும் உயிர் உருப்பெறலின் மாற்றங்கள் கடைசிக்கு முந்தைய படித்தரம்வரை அனைத்து உயிர்களுக்கும் ஒரே மாதிரியாக அமைவதைக்கொண்டே டார்வினுடைய பரிணாமத்துவம் உயிர்பெற்றது- நிலைபெற்றது. கருவறையின் உயிரின் கடைசிப் படித்தரம்வரை துல்லியமாக ஏழாம் நூற்றாண்டிலேயே எடுத்துச் சொல்லியதன் மூலம் இந்த நூற்றாண்டு அறிவியலாளர்களையும் ஆச்சர்யப்பட வைத்தது அல்குர்ஆன். இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்ட ”மாரிஸ் புகைல்” போன்ற விஞ்ஞானிகளே இதற்குச்சான்று.

இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் உறுதிப்படுத்திய கருவறை நிலைகளை ஒவ்வொன்றுமாக அன்றே சொன்ன அல்குர்அன் தனது அதே வசனத்தின் முடிவிலேயே டார்வினிஸ்டுகளுக்கு மறுப்பு அளித்து விடுகிறது. ”பின்னர் அதனை வேறொரு படைப்பாக்கினோம்” (அல்குர்ஆன். 23:14) டார்வின் தத்துவம் என்பது ஒரு பலமான முழக்கத்தினால் அமைகிற அனுமானமேயாகும். எனவேதான் அல்குர்ஆன் கூறும் கூற்றைத் தவிர்த்து மறுப்புகளை முன் வைக்க இயலாது. தர்க்கரீதியிலும் ”குரங்கின் பரிணாமம் மனிதனென்றால் மனிதனின் பரிணாமம் எதுவாகும்?” என்கிற கேள்வி எழுகின்றது. கருநிலைகளை எல்ல உயிர்களுக்கும் கடைசிக்கு முந்தைய நிலைவரை ஒத்திருப்பதைக் கொண்டே பரிணாமக் கொள்கையை மெய்ப்பித்தால் கடைசி நிலையில் உயிர் வித்தியாசப்படுவதை எப்படி விளக்குவார்கள் இந்த டார்வினிஸ்டுகள்? என்று உரத்த வினா எழுப்புகிறது இந்நூல்.

தம்பதிகளின் தனிப்பட்ட காரணங்களைக் கொண்டு குழந்தைப் பெறுவதை தற்காலிகமாக தள்ளி வைக்கலாமே தவிர முற்றிலுமாக அந்த பாக்கியத்தை இழந்து விடுவதை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லைதான். ”வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்- அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்” என்கிறது அல்குர்ஆன்(6:51) இந்த வசனப்படி குடும்பக் கட்டுப்பாட்டிற்கு மனிதர்கள் காட்டுகிற சமூக காரணங்கள் அடிபட்டுப்போய்விடுகிறது என்பதையும் வறுமை என்பது மக்கள் பெருக்கத்தால் தான் என்பதை விடவும் முதலாளித்துவ சுரண்டல்கள்தான் இம்மண்ணில் நிலைத்து நிற்கிறது- காலங்காலமாக- என்பதையும் இந்நூல் எடுத்துச் சொல்கிறது. அதேசமயம் முஸ்லிம்களும் கூட மருத்துவம் மற்றும் இதர காரணங்களுக்காக குடும்பக் கட்டுப்பாட்டை தற்காலிகமாக கடைபிடிக்கத் தடையில்லை என்பதை இஸ்லாமிய வரலாற்று ஆதாரத்துடன் இந்நூல் தெரிவிக்கிறது.

ஆண் உயிரின் அவசியமேயின்றி பெண்ணிலிருந்தே ஒரு மரபணு பெறப்பட்டு அவ்வணுவை அதே பெண்ணின் உயிரின் கரு முட்டையோடு இணைத்து அதே உயிரின் நகலைப் போலவே உயிரினத்தை உண்டாக்க முடியும் என்று நிருபித்துக் காட்டப்பட்டுள்ளது இன்று இதுவே ”குளோனிங்” எனப்படுகிறது! இதுவல்ல ஆச்சரியம். ஆச்சரியம் என்னவெனில் அந்த குளோனிங்குக்கும் அல்குர்ஆனில் ஆதாரம் உள்ளது என்பதுதான். ஆம் கிறித்துவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைப்படி ஈஸா(அலை) என்கிற இயேசு தந்தையின்றி அற்புதமான வகையில் பிறந்தார்கள் என்பதாகும். இப்பிறப்பையே குளோனிங்குக்கான அல்குர்ஆனின் ஆதாரமாகக் கொள்ளவேண்டும். இறைமறையின் அந்த வசன ஆதாரங்களைப் பாருங்கள்.

”அது அவ்வாறுதான்- இது எனக்கு மிகச் சுலபமானதே (உன் வயிற்றில் பிறக்கும் குழந்தையாகிய அவர்) மனிதர்களுக்கு அத்தாட்சியாகவும் நம்முடைய அருளாகவும் ஆவார் இது விதிக்கப்பட்டதன்படியே…” என்று இறைக்கூற்றாக மர்யம்(மேரி)யிடம் சொல்லப்பட்டது” (அல்குர்ஆன். 19:21) ”இது எனக்கு மிகச் சுலபமானதே… மனிதர்களுக்கு அத்தாட்சி” ஆகிய வசனங்கள் வியப்பையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தி விடுகின்றனவல்லவா! அல்ஹம்துலில்லாஹ்.

குழந்தையின் கருவறை நிலைகள், குடும்பக்கட்டுப்பாடு, குளோனிங், போன்றவைகளில் அல்குர்ஆனின் தகவல்களின் விஞ்ஞான ஒத்திசைவை இந்நூல் விளக்கமாகவே தெரிவிக்கிறது. இந்நூல் இன்னும் எளிமையாக இயல்பாக எழுதப்பட்டிருக்க வேண்டும். வார்த்தைகளின் அதீத வளமும், வலமும் எல்லோரையும் எளிதாக எட்டாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மிகச் சமீபத்திய விஞ்ஞானப் புரட்சியாக மனித உயிரின் அடிப்படை அலகான DNA வின் மூலக்கூறுகளை வரிசைப்படுத்தும் ஜீன் டிராஃப்டிங் (Gene Drafting) சாதனை நிகழ்ந்துள்ளது. இதன் பயனாக பரம்பரை நோய்களான சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, புற்றுநோய், பொன்றவைகளை தலைமுறைகளுக்குக் கடத்தும் ஜீன்களை இனம் கண்டறிந்து முழுமையாக ஒழிப்பதன் மூலம் மனிதன் 1200 வயதாண்டுகாலம் வாழும் வாய்ப்பிருப்பதாக விஞ்ஞான கருத்துக்களும் ஆய்வுகளும் வெளி வருகின்றன. இத்துறையில் ஆய்வுகள் தொடர்கின்ற நிலையில் இது குறித்தும் இந்நூல் பேசுகிறது.

பரம்பரை நோய்களை வெல்லும் சாத்தியக்கூறுகள்  மரணம் தள்ளிப் போடப்படும் சாத்தியங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது என்றே கருத வேண்டியுள்ளது. காரணம் உள் தாக்குதல்களான பரம்பரை நோய்களை ஒழித்துக்கட்டும் அதே சமயம் வெளிப்புறத்து தாக்குதல்களான விபத்துக்கள் போர் மேகங்கள் இயற்கை சீரழிவுகள் ஆகியன அதிகப்பட்டு வருவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆகவே பரம்பரை நோய்கள் வெல்லப்படும் என்பது ஒரு பலமான அனுமானமே. அதேசமயம் ”மரணம் தள்ளிப் போடப்படும்” என்கிற அனுமானம் அத்தனை பலமானதல்ல என்பதையும் நூலாசிரியர் கருத்தில் எடுத்திருக்க வேண்டும்.

இத்தகைய சமீபத்திய விஞ்ஞான விந்தைகளையும் அல்குர்ஆனின் ஒளியில் இந்நூல் விளக்கியிருந்தாலும் இன்னும் சில தகவல்களை இந்நூல் விட்டுவிட்டதோ என்றும் தோன்றுகிறது. உதாரணம்- மனித உடலில் வலியை உணர்ந்து கொள்ளும் வலி உணர்வாங்கிகளை (Pain Receptor)அவை தோலில்தான் உள்ளன என்று சமீபத்தில்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே அல்குர்ஆனில் நரகவாசிகளைக் குறித்துச் சொல்லும்பொது ”தோல் வெந்து உருகிவிட்ட அவர்களுக்கு மீண்டும் தோல் போர்த்தப்படும்- அவர்கள் வலியை உணர வேண்டும் என்பதற்காக” என்று மிகத்துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது இதைக்கண்டு வியந்த கீழைநாட்டு (தாய்லாந்து) விஞ்ஞானப் பேராசிரியர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியதும் உண்மை இத்தகையத் துல்லியத் தகவல்களை அடுத்தப் பதிப்பிலாவது இடம் பெறச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விஞ்ஞானத்திற்கு விளக்கமாகவோ- வித்தாகவோதான் இஸ்லாம் இருந்து வந்திருக்கிறது என்பதை இயல்பாக எடுத்துச் சொல்லும் இந்நூல் சராசரி மனிதருக்கு மட்டுமின்றி அறிவியலையே மதமாக ஆக்கிக் கொண்டவர்களுக்கும் பகுத்தறிவின் பெயரால் நாத்திகம் பேசும் நண்பர்களுக்கும் உண்மை விளங்கிடப்பெரிதும் பயன்படும் என்பது திண்ணம். அந்த எண்ணம் ஈடேறவும் நூலின் நோக்கத்தின் வெற்றிக்கும் இறைவனைப் பிரார்த்தித்து அமைகிறேன்.

இப்னு ஹம்துன்.

பரங்கிப்பேட்டை.

22.03.2001 

…………………………..

Advertisements

ஒரு பதில் to “இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சவால்கள்.”

  1. A.NASEERUDEEN said

    அஸ்ஸலாமு அலைக்கும்!
    இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சவால்கள். எழுதியவர் : ஜி.நிஜாமுத்தீன் என்ற நூல் தேவைப் படுகிறது. எங்கு கிடைக்கிறது என்ற விவரம் தவ்வு செய்து தெரியப் படுத்தவு. zazakkallah …

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: