தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

கருவறை நிலைப்பாடு – டார்வினிஸமா…? குர்ஆனா…?

Posted by tamilmuslim மேல் ஜனவரி 9, 2008

கருவறை வளர்ச்சியின் பரிணாம நிலைபாட்டில் டார்வினின் கோட்பாடு சரியா…? (புத்தகத் தொடர்)

கருவியல் சம்பந்தமான நிலைபாடுகளை அப்பட்டமாக அறியக் கூடிய காலத்தில் வாழ்கிறோம். குழந்தை உற்பத்தியின் பல நிலைகளை கண்டறிந்தவர்களில் சிலர் மனிதன் பரிணாமம் பெற்றவன்தான் என்ற டார்வின் தத்துவத்தை முன் வைக்கிறார்கள். இறைக் கொள்கையில் ஆழமாக இருக்கக் கூடிய இஸ்லாம் இதை எப்படி சமாளிக்கிறது? கருவாதாரங்களுக்கும், அல்குர்ஆனுக்கும் தொடர்பில்லை என்ற குரல் உண்மைதானா?

வினா: வெண்ணிலா, கஸ்தூரி. கருப்பூர்- சுவாமிநாதன். விழுப்புரம்.

‘பனைமரத்தில் மாங்காய் காய்க்கும்- பந்தலில் காய்க்கும் பாகற்காய் புளிக்கும்’ என்று புரட்சித் தத்துவம் உதிர்த்தால் அதை ஏற்றுக்கொள்ளவும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த ஒரு சிலரை தக்க வைத்துக்கொள்ள டார்வினிஸம் பெரும்பாடு படுகிறது. கருவறையில் உருவாகும் கருவாக்க நிலை மாற்றங்கள் என்பது வேறு, அதிலிருந்து டார்வினிஸ்டுகள் புரிந்து கொண்ட விளக்கம் வேறு. விஞ்ஞானத்தின் தந்தையாக டார்வின் கருதப்பட்டால் டார்வின் பக்தர் போன்ற கோமாளிகள் வேறுயாருமில்லை என்று கூறிவிடலாம்.
இஸ்லாம் என்பது மேஜிக் வாழ்க்கையைப் போதிக்கும் சித்தாந்தமல்ல. விஞ்ஞானப் பூர்வமாக எத்தகைய கேள்வியையும் அது எதிர் கொண்டு உண்மைக்கு மாற்றமில்லாத விஞ்ஞானத்தை இஸ்லாம் பிரதிபலிக்கிறது. மனித படைப்பு விஷயத்தில் டார்வின் குறுக்கீடுகள் இருப்பதால் இதை நாம் ஓரளவு விரிவாக அணுகுவோம்.
அமீபா என்ற ஒரு செல் உயிரிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்துதான் பல உயிர்கள் வெளிப்பட்டன. கால சூழலுக்கும், செய்யும் வேலைக்கும் ஏற்றது போன்று ஒவ்வொரு காலகட்டத்திலும் பரிணாமம் பெற்ற உயிர்கள் தம் உடலமைப்பை மாற்றிக்கொண்டன. பரிணாம உயிரி ஒரு கட்டத்தில் குரங்காக மாறி பின்னர் தேவைக்கேற்ப மனிதனாக மாற்றம் அடைந்தது எனவே மனித இனம் மொத்தமும் குரங்கு வழித் தோன்றல்களே என்பது டார்வினால் உயிரூட்டப்பட்டத் தத்துவம்.
விஞ்ஞான வளர்ச்சியில் கருவறை நிலைப்பாடுகளை கண்ட சமீபத்திய விஞ்ஞானிகளான லாமர்க், ஹெக்கல் போன்றவர்கள் கருவறையில் பரிணாமம் இருப்பதால் டார்வின் தத்துவம் உண்மைதான் என்பதை நிலைநாட்ட முற்படுகிறார்கள். ஒரு குழந்தை உருவாவதற்கான மொத்த நிலைப்பாடுகள் எத்தனை என்பதை விஞ்ஞானம் கூறக் கேட்போம். பல நூற்றாண்டுகளாக பிரபஞ்சம் பற்றியும் பிரபஞ்ச உயிரினங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் உந்து சக்தியால் மனிதன் ஏராளமான விஞ்ஞான முன்னேற்றங்களை கண்டு தெளிந்திருக்கிறான். புழு- பூச்சி என்று துவங்கிய ஆய்வு மனித படைப்பு குறித்து மிக பலமாக ஆய்வு செய்தது. மனித கரு உருவாக்கம் எப்படி நிகழ்கிறது அது எதில் முடிகிறது என்பதை ஆழ்ந்து நோக்கிய ரன்ஸ்ட்ரம், வான்பேயர், வில்லியம் போன்றவர்கள் கரு வளர்ச்சியை எட்டு நிலைகளாகப் பிரிக்கிறார்கள்.
1. ஆணின் உயிரணு- பெண்ணின் கருமுட்டை
2. உயிரணு உள்ளே நுழைந்ததும் கருவுற்ற முட்டையாக மாறுவது
3. கருவுற்ற முட்டை கருப்பையை அடைந்து இரண்டாகப் பிளந்து செல்களைப் பெருக்கி சதையாவது
4. அந்த சதைத்துண்டு கருவில் உருவாகும் உயிரினத்தின் உறுப்புகளை தீர்மானிக்க மூன்றடுக்கு உயிரியாக மாறுவது
5. ஒவ்வொரு அடுக்கிலிருந்தும் குழந்தையின் உறுப்புகள் வெளிப்படுவது
6. உறுப்புகளின் வளர்ச்சி
7. உடலில் உள்ள மொத்த உறுப்புகளும் அதனதன் தன்மையுடன் சிறப்பியல்புகளைப் பெறுவது
8. இறுதியாக இது என்ன படைப்பு  என்று தீர்மானிக்கப்பட்டு வெளியேறுவது. இந்த எட்டு நிலைகளில் முதல் ஏழு நிலைகளை ஆராயும்போது அந்த ஏழு நிலைகளில் எந்த ஒரு நிலையிலும் கருவறையில் இருப்பது இன்ன உருவம்தான் என்று தீர்மானிக்க முடியவில்லை. எட்டாவது நிலை வரும்போதுதான் இது மனித உருவம் என்று தெரிய வருகிறது. மனித கருவுக்கு மட்டுமன்றி கருப்பையில் குழந்தையை சுமக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இதுதான் நிலை. ஆடோ, மாடோ, குரங்கோ, குதிரையோ முதல் ஏழு நிலைகளில் அதன் உருவ அமைப்பை பெறாமல் எட்டாவது நிலையில்தான் அதன் உருவ அமைப்பை பெறுகிறது.
மனித கருவில் இத்துனை பரிணாம வளர் நிலைகளை கண்ணுற்ற டார்வினிஸ்டுகள் கரு கடைசியில் மனித நிலையை அடைவதால் புதிய விஞ்ஞான விளக்கத்ததை(?) கற்பித்து மனிதன் விலங்கிலிருந்து வெளிப்பட்ட பரிணாம வளர்ச்சியாளன்தான் என்று முழங்குகிறார்கள். இந்த வாதம் எவ்வளவு ஓட்டைத்தனமானவை என்பதை விளக்குவதற்கு முன்னால் மனித இனம் தோன்றி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின் பற்பல ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கருவறைப் புதிர்களையும், விளக்கங்களையும் எந்த மதத்தால்தான் சொல்லியிருக்க முடியும்? இஸ்லாத்தின் மைய ஆதார நூலான அல்குர்அனில் மட்டும் என்ன இருக்கப்போகிறது என்று வாய் வேட்டுப்போடும் நவீன ஞானிகளுக்கு வழிகாட்ட குர்ஆனிடம் ஆழைத்துச் செல்வோம்.
விஞ்ஞானத்தால் அறிவு குளிரும் ஞானவான்களே!
அல்குர்ஆன் மத சடங்கை போதிக்கும் நூல் இது முஸ்லிம்களை இப்படி ஒரு வட்டத்திற்குள் வாழத்தூண்டும் என்று உங்கள் சிந்தனையை சுருக்கிக் கொள்ளாதீர்கள் நீங்கள் தேடும் எந்த விஞ்ஞான உண்மைக்கும் இந்த இறைவேதம் வழிகாட்டுகிறது. மனித படைப்பைப் பற்றியும் கருவாக்கத்தைப் பற்றியும் அல்குர்ஆன் பேசுகிறது.
நிச்சயமாக (இறைவனாகிய) அவன் உங்களை பல நிலைகளிலிருந்துப் படைத்தான். (அல்குர்ஆன்- 71:14)
கருவறை செல்லும் உயிரணு உடனடி குழந்தையாக மாறுகின்றது, இல்லை, இல்லை கருமுட்டைதான் குழந்தையாக மாறுகின்றது என்ற முந்தையகால விஞ்ஞான நம்பிக்கைகள் முற்றாகப் புறக்கணித்து கருவறையில் ஒரு நிலை மட்டும் என்ற நிலை எந்த சந்தர்ப்பத்திலும் இல்லை. கருவுருவாக்கம் என்பது பல நிலைகளை கொண்டதாகும் என்ற நவீன விஞ்ஞான உண்மையை அன்று முதலே உலகிற்கு அறிவித்து நிற்கிறது குர்ஆன்.
பல நிலை என்பதன் பொருள் என்ன? வியக்க வைக்கும் இன்றைய கருவறை விஞ்ஞானத்தை பல நிலை என்ற குத்து மதிப்பான வார்த்தையைப் போட்டு சொல்லி விட்டால் அது விஞ்ஞான அறிவிப்பாகுமா? என்று அறிவார்ந்த வாதம்(?) எவராவது புரிந்தால் இன்னும் ஆழமாக கருவுருவாக்கம் பற்றி அவரோடு பேசுகிறது குர்ஆன். ஆதாரத்தைப் பார்க்குமுன்.
பல நிலை என்பதை குத்து மதிப்பான அறிவிப்பு என்று அவசரமாக பதில் கூறும் உங்கள் உள்ளங்களைக் கேட்டுப்பாருங்கள். பதினேழாம் நூற்றாண்டுவரை நீடித்த கருவறையில் குழந்தை வளர்ச்சி ஒரு நிலைதான் என்று தப்பான விஞ்ஞானத்தை அன்றே குர்ஆன் மறுத்தது எப்படி? டார்வினை இறைவனாக்கும் நீங்கள் படைத்த உண்மையான இறைவன் பற்றி அவன் இறக்கிய வேதம் பற்றி பாராமுகமாய் இருப்பது ஏன்?
கருவாக்கம் பற்றிய வசனம் இதோ…
1. நாம் மனிதனை களிமண்ணிலுள்ள சத்தினால் படைத்தோம்
2. பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத்துளியாக்கி வைத்தோம்
3. பின்னர் அந்த இந்திரியத்துளியை அலக் என்ற நிலையாக்கினோம்
4. பின்னர் அந்த அலக் கை தசைக்கோர்வையாக்கினோம்
5. பின்னர் தசைக்கோர்வைக்கு எலும்பை அணிவித்தோம்
6. பின்னர் அவ்வெலும்புகளின் மீது மாமிசத்தைப் போர்த்தினோம்
7. பின்னர் அதனை வோறொரு படைப்பாக்கினோம் இறைவன் பெரும் பாக்கிமுள்ளவன். அழகான படைப்பாளன் (அல்கர்ஆன்- 23:12,13,14)
உண்மையை அறியும் நோக்கில் அணுகும் எவருக்கும் இவ்வசனம் இதய சிலிர்ப்பை ஏற்படுத்தவே செய்யும். இருபதாம் நூற்றாண்டில் அப்பட்டமாக தெரிவிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையை  எழாம் நூற்றாண்டிலிருந்தே உலகிற்குச் சொல்லும் இந்த அற்புதம் எப்படி நிகழ்ந்தது? அறிப்பூர்வமாக விளக்கம் அளிப்போர் உண்டா?
இன்னும் சொல்லப்போனால் கருவாக்கம் சம்பந்தமான விஞ்ஞான நிலைப்பாடு  உயிரணு பெண்ணின் உள்ளே சென்றதிலிருந்து துவங்கும்போது திருக்குர்ஆன் விந்தணு உற்பத்தியிலிருந்து இன்னும் ஆழமாக அணுகியுள்ளது. .
இன்னும் சொல்லப்போனால் கருவாக்கம் சம்பந்தமான விஞ்ஞான நிலைப்பாடு  உயிரணு பெண்ணின் உள்ளே சென்றதிலிருந்து துவங்கும்போது திருக்குர்ஆன் விந்தணு உற்பத்தியிருந்து இன்னும் ஆழமாக அணுகியுள்ளது.
நிச்சயமாக நாம் மனிதனை மண்ணின் சக்தியிலிருந்தே படைத்தோம் (23:12)
ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அது ஆண் என்ற தகுதியைப் பெறுவதில்லை. கடின உணவுகள் உட்கொண்டு வளர்ந்த பிறகே ஆண் என்ற தகுதியைப்பெறுகிறான். அவன் இத்தகுதியைப் பெறுவதற்கான மூலப்பொருட்கள் களிமண்ணின் சத்தில்தான் இருக்கிறது, சைவ உணவோ அசைவ உணவோ எதுவும் பூமியிலிருந்து மண்ணின் சத்திலிருந்துதான் வெளிப்படுகின்றன. எனவே திருக்குர்ஆன் இப்படிக் கூறுகிறது மனித உற்பத்தி விலங்கிலிருந்து அல்ல, மண்ணிலிருந்துதான். மனித உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களுக்கு அவனது மரபியல் மட்டும் காரணமல்ல. பிறக்கும் குழந்தைக்கு உணவு கொடுக்காமல் அது மரபியல்படி வளரும் என்று எவரும் முடிவு செய்வதில்லை. குழந்தை செத்து மடியட்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே மரபியலை வாதமாக்க முடியும். வாழ்வாதாரமான உணவுதான் மனித உடலில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மனிதனுக்குத் தேவையான மொத்த புரதசத்துக்களும் அவன் வாழும் மண்ணில் குறிப்பாக விளை நிலங்களில் அடங்கியிருக்கின்றன. நவீன உடலியல் மருத்துவ உலகம் இதை நிருபித்துக் கொண்டிருக்கிறது. மனித உடலில் அடங்கியிருக்கும் வேதிப்பொருள்களின் நிலைகளை ஆய்வு செய்யும் எவரும் இதன் மூலம் மண்தான் என்பதை விளங்குவர். திருக்குர்அன் இதையே படைப்பின் துவக்கமாகக் கூறுகிறது.
கரு உற்பத்தியின் அடுத்தக் கட்டம் குர்ஆனின் கூற்று.
பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் விந்தாக்கி வைத்தோம் (23:13)
விந்தணுவைப்பற்றி பேசும் இவ்வசனம் அதற்கு பாதுகாப்பான இடம் தேவையென அறிவிக்கிறது. இந்த வசனத்தில் இரண்டு பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன கறார்- மகீன். இவையிரண்டிற்கும் கெட்டுப்போகும் தன்மையற்ற பாதுகாப்பான இடம் என்று பொருள் எடுத்தாலும் இது முழுமையான பொருள் அல்ல எனினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற பொருள்.
1. ஆணிடம் விந்தணு உற்பத்தியாகும் விதைகள், இதுவும் முறையான பாதுகாப்பான இடம்
2. விந்தணு நுழைந்த கருமுட்டை கருவறை சென்று தங்குவதும் பாதுகாப்பான இடம்
மண்ணின் சக்தி, விந்தணு உற்பத்தியாகும் இடம் அதன் தன்மை, அது போய் சேரும் இடம், அதன் தன்மை ஆகியவற்றை குர்ஆன் பேசிவிட்டு அடுத்த கட்டத்திற்கு நகருகிறது.
பிறகு அந்த விந்தினை அலக் ஆக்கினோம் (23:14)
விந்தணுவை உள்ளே ஏற்றுக்கொண்டு கருவுற்ற முட்டை கருப்பையை அடைந்து அதன் சுவர்களை அழுத்திப்பிடித்து தொங்கி வளரும் அந்த நிலையை அலக் என்ற பத பிரயோகத்துடன் இறைவன் சுட்டிக்காட்டுகிறான். பின்னர் அந்த தொங்கு பொருள் இரண்டாகப் பிளந்து செல்களைப் பெருக்கி ஒர் தசைக் கோர்வையாகிறது.
பின்னர் அந்த அலக்கை தசைக் கோர்வையாக்கினோம் (23:14)
இந்தத்தசைக் கோர்வை மூன்றடுக்கு உயிரியாக பரிணாமம் அடைகிறது. இந்த சந்தர்ப்பத்தில் கருவின் நிலையைப் பார்த்தால் தெளிவற்றத் தன்மையின் அதன் மாற்றம் இருக்கும் என்பதை நவீன ஆராய்ச்சிகள் படம் பிடித்துக் காட்டுகின்றது. இதை அப்பட்டமாக குர்ஆன் கூறுகிறது.
பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கோர்வையிலிருந்து படைத்தோம் (அல்குர்ஆன் 23:5)
பல ஆயிரம் கோடி செல்களால் பிணயப்படும் மனித உடம்பின் உருப்புகள் அதன் தன்மை இந்த சந்தர்ப்பத்தில்தான்- அதாவது உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான, மூன்றடுக்குயிரிலிருந்துதான்- வெளிப்படுகின்றன. நரம்புகள், தசைகள், இரத்தம், இதர உறுப்புகள் என்று மொத்த உடம்பும் இந்த மூவடுக்கு உயிரியில் இருந்துதான் பிரிகின்றன. உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான, இப்படி ஓரு பரிணாமம் கருவறையில் நிகழவில்லையென்றால் எந்த மனிதனும் அவனுக்குரிய அழகான அமைப்பைப் பெறவே முடியாது. உறுப்புகள் மாறிப்போய் ஒரு வினோத அமைப்பில்தான் அவன் வெளியேறுவான். ஆனால் கருணைமிக்க இறைவன் மனிதனை அலங்கோல அமைப்பாக வெளிப்படுத்தாமல் சிறந்த உடலமைப்புடன் வெளிப்படுத்துகிறான்.
திடமாக நாம் மனிதனை அழகான வடிவில் படைத்தோம் (அல்குர்ஆன் 95:4)
போர்த்துதல் என்ற ஆழம் பொருந்திய வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. உள்ளே உள்ளப்பொருள் வெளியில் தெரியாமலிருப்பதற்கு, கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்கு- மூடி வைப்போம் அல்லது போர்த்தி வைப்போம். மூடி, போர்வை, உள்ளே உள்ளப்பொருளுக்கு பாதுகாப்பு வளையமாகும். மனித உடலுக்கு அத்தகைய ஒரு பாதுகாப்பு வளையத்தை கொடுக்கும் பொருட்டு மூவடுக்குயிரிலிருந்து உருப்பாக்கம் துவங்கி வளர்ந்து அதன் செயலாக்கத் தன்மையைப் பெற்று பிறகு இப்போது அவை வெளியில் தெரியாமல் கெட்டுப்போகாமல் பாதுகாக்க மூடி- போர்வை தேவைப்படும் தருணத்தில் இறைச்சியை அதன் மீது போர்த்தி மூடுகிறான்.
உயிரணுவாக, கருவுற்ற முட்டையாக, தொங்கி வளரும் அலக்காக, தசைப்பிண்டமாக, மூவடுக்குயிரியாக, எலும்பைப் பெற்றதாக, இறைச்சியால் போர்த்தப்பட்டதாக பரிணாமம் பெற்று வளரும் கரு இதுவரை அதன் அசல் அமைப்பைப் பெறவில்லை என்பது விஞ்ஞானம் கூறும் உண்மை.
இறைவனைப் புறக்கணிக்கும் நாத்திகத்திற்கும், அவனின்றி எதுவும் இல்லை என்ற இறைக் கோட்பாட்டை மையப்படுத்தும் இஸ்லாமிய ஆத்திகத்திற்கும் வேறுபாடு துவங்கும் கட்டத்தை நாம் நெருங்கியிருக்கிறோம்.
கருவை சுமக்கும் விலங்கினங்களின் கருவறை நிகழ்வுகளும், மனித கருவறை நிகழ்வுகளும், மேற்கண்ட பல நிலைகளில், பரிணாம வளர்ச்சிகளில் எத்தகைய வேறுபாடுமில்லாமல் ஒரே விதத்தில் இருப்பதால் இதைக் கண்ணுற்ற நாத்திகம் விலங்கின் கருவோடு மனிதக் கரு ஒத்திருப்பதால் மனிதன் விலங்கிலிருந்து வந்தவன்தான் என்ற அவசர முடிவுக்கு வந்து விடுகிறது.
கருவை இறைச்சியால் போர்த்தும் வரையுள்ள நிகழ்வுக்குப் பிறகு கருவறைகளில் திடீரென்று ஒரு மாற்றம் உண்டாகி எந்தெந்த உயிரினங்கள் கருவை சுமக்கிறதோ அந்தந்த உயிரினங்கள் தன் இனத்திற்குரிய புதிய குழந்தையைப் பெற்றெடுக்கிறது.
இதை எவ்வளவு தெளிவாக இறைவனின் வேதம் எடுத்துக் கூறுகிறது பாருங்கள்.
எலும்பை இறைச்சியால் போர்த்துகிறோம், பின்னர் அதை வேறொரு படைப்பா(மனிதனா)க்கினோம் அல்குர்ஆன் 23:14)
பெரும் நுண்ணோக்கிகளை வைத்து இரவு பகலென்று பாடுபட்டு கண்டுப்பிடித்த விஞ்ஞான உண்மையை ஏழாம் நூற்றாண்டில்- இன்றை விஞ்ஞானிகள் சொன்ன உண்மையை இன்றிலிருந்து ஆயிரத்து நானூறு வருடங்குளுக்கு முன் ஒரு வேதம் சொல்கிறதென்றால் ஒரு மனிதனால் உருவாக்கிய வேதமாக அது இருக்க முடியுமா? டார்வினிஸ்டுகள் சிந்திக்க வேண்டும்.
இறைச்சி அணிவிக்கப்பட்டப் பிறகு கரு வேறு படைப்பாக வளர்கிறது. மனித கரு மட்டுமல்ல கருவைச் சுமக்கும் ஒவ்வொரு இனத்தின் கருவும் இந்த சந்தர்ப்பத்தில்தான் தன் இனமாக மாறுகின்றன. மனித ஆண் உயிரணுவிலிருந்து பரிணாமம் பெற்றக் கரு இறைச்சியால் போர்த்தப்பட்டப் பிறகுதான்- தந்தையை- தன் இனத்தையொத்த- மனிதக் குழந்தையாக மாறுகிறது.
மனிதர்களே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? இறைவனின் மகத்துவத்தை நீங்கள் உணராமல் இருக்கிறீர்கள். அவன் உங்களைப் பல நிலைகளிலிருந்துப் படைத்தான்.(அல்குர்ஆன் 7:13.14)
நவீன கருவியலை எத்துனை ஆணித்தரமாக இறைவேதம் பேசுகிறது என்பதை இதன் மூலம் அறிவுடையோர் எவராலும் விளங்க முடியும்.
இனி இறைக் கோட்பாட்டை புறக்கணிக்கும் எண்ணத்தில் அறிவாற்றலை சுருக்கிக் கொள்ளும் டார்வின் வாதிகளுக்கு நாம் சில கேள்விகளை வைப்போம்.
1. காலச் சூழலுக்கும் வாழ்வாதாரத் தேவைகளுக்கும் ஏற்பவே உயிரினம் பரிணாமம் அடைந்தது என்பது டார்வின் தத்துவத்தின் முக்கிய அம்சம். அப்படியானால் அவர்கள் வாதப்படி கருவறையில் விலங்காக உற்பத்தியாகும் கருக்கள் (உலகில் ஒரே நேரத்தில் ஏராளமான பெண்கள் கருத்தரிக்கிறார்கள்) மூன்று மாதங்களில் மனித உருவைப் பெறுகிறதே விலங்கு குழந்தையாகப் பரிணாமம் பெறும் அளவிற்கு அப்படியென்ன வாழ்க்கை சூழல் கருவறையில் நிகழ்கிறது?
2. மூன்றே மாதங்களில் விலங்கை மனிதனாக மாற்றும் இந்த அற்புத விந்தையை நிகழ்த்துவது கருப்பையா? அப்படியானால் சக்தி பொருந்திய ஆய்வுகளைச் செய்து வெற்றி கண்ட மனிதன் செயற்கைக் கருப்பை மூலம் விலங்கின் கருவை மனிதனாக மாற்றிக் காட்ட முடியுமா?
3. செயற்கை கருப்பைக்கு அந்த சக்தி இல்லையென்று வாதித்தால் பெண்ணின் கருப்பைக்கு இத்தகைய தன்மை எப்படி வந்தது?
4. கருப்பைதான் இப்பரிணாம வளர்ச்சிக்கு பங்கு வகிக்கிறது என்று இவர்கள் அழுத்தமாக நம்பினால், குரங்கின் உயிரணுவை பெண்ணின் கருப்பையில் செலுத்தி மனிதக் குழந்தையைப் பெற வைக்க முடியுமா?
5. கருப்பை மாற்று அறுவை சிகிச்சை முறை வந்துவிட்ட காலத்தில் வாழ்கிறோம். ஒரு விலங்கின் கருப்பையை பெண்ணுக்குப் பொருத்தி அதில் மனித உயிரணுவை செலுத்தினால் அந்த விலங்கின் கருப்பை மனித உயிரணுவை விலங்காகவே வளர்த்துக் காட்டுமா?
6.நவீன கருவியலை இத்துணை துல்லியமாகச் சொல்லும் குர்ஆன். கருவறையின் பரிணாமங்களைக்கூட எடுத்துக்காட்டும் குர்ஆன், விலங்கியலை மறுத்து மண்ணியலே மனிதனின் முதல் கூறும், மூலக்கூறும் என்று கூறக் காரணம் என்ன?
7. பரிணாமம் என்பதற்கு ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிராக மாறுவது, அமீபா புழுவாகவும் புழு பூச்சியாகவும் ஆவதென்ற இதரப் படைப்பியல் விளக்கத்தை மனித கருவியலுக்குப் பொருத்தினால் கருவறையில் இத்தகைய நிலைகள் எப்போது தோன்றுகிறது?
8. இறுதியாக நாம் கேட்டது பரணாமம் அடையும் கரு, கருவறையில் எந்த சந்தர்ப்பத்தில் விலங்கை, குரங்கை ஒத்திருக்கிறது? கருவளர்ச்சியில் இந்த கட்டத்தில் விலங்கை ஒத்திருக்கிறது என்பதை நிருபித்துக் காட்ட முடியுமா?
9. விலங்கின் கருவும் மனித கருவும் ஒரே விதத்தில்தான் இருக்கின்றன. அதுதான் எட்டாவது வினாவுக்குரிய ஆதாரம் என்று எவராவது கூறினால், விலங்கின் கரு அதன் கடைசி நிலையை அடைந்து விலங்காகத் தெரிவதற்கு முன் இது விலங்கின் கருதானென்று எதை வைத்துக் கண்டுப்பிடிப்பது?
10. உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான என்று குர்ஆன் மூவடுக்குயிரியின் நிலையில் இது இன்ன உருவம் என்று விஞ்ஞானத்தாலும் தீர்மானிக்க முடியாத நிலையில் இது விலங்கின் உருவம்தான் என்ற ஞான அறிவிப்பு எங்கிருந்து வந்தது?
11. இந்தக் கேள்விகளெல்லாம் எங்களிடம் வேண்டாம், எங்கள் நம்பிக்கை மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதுதான் என்று வாதித்தால், கருவறையின் பரிணாமம் விலங்கியல் பரிணாமம்தான் என்று குருட்டு நம்பிக்கைக் கொண்டிருந்தால், குறைந்த பட்சம் அந்த விலங்கியல் கரு எப்போது குரங்கு வடிவம் எடுக்கிறது? குரங்கு எப்போது மனித வடிவில் மாறுகிறது? என்பதையாவது நிருபித்துக் காட்டட்டும்
நாத்திகத்தால்- டார்வினால் கவரப்பட்ட எவருக்கும் இந்தக் கேள்விகளை முன் வைத்து பதிலை முடிக்கிறோம்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: