தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

குடும்பக் கட்டுப்பாடு

Posted by tamilmuslim மேல் ஜனவரி 9, 2008

குடும்பக் கட்டுப்பாட்டை முஸ்லிம்கள் அதிகமாக விரும்புவதில்லையே ஏன்…?

குடும்பக் கட்டுப்பாட்டை முஸ்லிம்கள் அதிகமாக விரும்புவதில்லையே. உலகில் பல நாடுகள் மக்கள் கட்டுப்பாட்டை வலியுறுத்தித் திட்டங்கள், மாநாடுகள் என்று விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்போது உலக நலத்திட்டத்தில் குறிப்பாக இந்தியா நலத்திட்டத்தில் அக்கறையில்லாமல் முஸ்லிம்கள் இதைப் புறக்கணிக்கலாமா?

வினா: அமுதன், செங்கல்பட்டு- பாவானி, நாமக்கல்- ரவீந்தர், திட்டச்சேரி- கருப்பையா, பேராவூரணி- தேவிகா, பொன்னி, நாகர்கோவில்- இன்னும் ஏராளமானோர். 

கருப்பை அறுவை சிகிச்சை உயிர் உற்பத்தி நாளங்களை நீக்கி மக்கள் கட்டுப்பாட்டு முறை சிகிச்சை காப்பர் டி, நிரோத் போன்ற தடுப்புமுறை சிகிச்சைகள் பற்றிய இஸ்லாமிய கருத்தோட்டத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

வினா: p. ராம்மோகன், தூத்துக்குடி.
 

மனித உடம்பின் ஒவ்வொருப் பகுதியும் இன்றியமையாத தன்மையுடன் மகத்தான வேலையை செய்யக்கூடியதாக அமைந்தள்ளது. ஒருசில பலவீனங்களைக் காரணம் காட்டி அத்தகைய உறுப்புகளை அகற்றுவதென்பது இயற்கைக்கு எதிரான போக்காகும். எந்த உறுப்பும் அது பழுதுபட்டு பயன்பட முடியாமல் போனால் மட்டுமே அதை உடம்பிலிருந்து முழுவதுமாக நீக்க வேண்டும்.
ஆணாயினும், பெண்ணாயினும் மனிதன் என்ற முறையில் நம் உடம்பு பலவீனங்களையும் நோய்களையும் சுமக்கத்தான் செய்கிறது. அந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அதை நாம் காரணம் காட்டி நம் உறுப்புகளை அறுத்தெறிந்து விடுவதில்லை. காரணம் உடல் உறுப்புகளின் அவசியம் உணரப்படுவதுதான். இதை எவரும் மறுக்க மாட்டோம். கண் நோய் வருவதால், கண்ணின் பார்வைக் குறைவதால் நாம் யாரும் கண்ணைப்பிடுங்கி எறிந்து விடுவதில்லை. எல்லா உறுப்புக்கும் இது பொருந்தும். இப்போது நாம் கேட்கிறோம், என்ன குறைபாட்டின் காரணமாக கருப்பையை நீக்க உலகநாடுகள் முயற்சிக்கின்றன? எந்தக் குறைபாடும் இல்லாததுதான் கருப்பையை நீக்கப்படுவதற்கான காரணமாகிப் போகின்றது. இங்கு மட்டும் மனித பலவீனத்தால் மருத்துவ விதி தலைகீழாகப் புரண்டு விடுகின்றது.
கருப்பை புற்றுநோய்,  குழுந்தையை சுமக்க முடியாத இதர குறைபாடுகளால் மருத்துவத்தின் பொது விதி அடிப்படையில் கருப்பை நீக்கப்படுவது தனி விஷயம். மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்ற பெயரில் இந்தக் கொடுமை நடப்பதுதான் எதிர்க்கப்பட வேண்டிய செயலாகும்.
சிகிச்சை பெற முடியாத அளவிற்கு கருப்பபை பலவீனப்பட்டுப் போனால் மட்டுமே அதை வெட்டி எடுப்பதற்கு இஸ்லாம் அனுமதிக்றது. இது இல்லாத மக்கள் தொகைப் பெருக்கம் என்ற காரணத்திற்காக கருப்பை நீக்கப்படுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அப்படியானால் குழந்தை பெற்றுக் கொண்டேதான் இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுப்பப்படலாம். குழந்தை உற்பத்தியின் மூலகர்த்தாக்களே மனிதர்கள்தான் என்பது போல் இக்கேள்வியின் தோரணையுள்ளது.
மனிதன் தனது சொந்த முயற்சியால் எந்தக் குழந்தையையும் உருவாக்க முடியாது. அதற்கு எத்தகைய சாத்தியமும் இல்லை. டெஸ்ட’ டியூப் முதல் குளோனிங்வரை மனிதன் மூலக்கூறுகளை செயற்கையாக இணைத்துதான் வெற்றி கண்டுள்ளானே தவிர மூலக்கூறுகளை உருவாக்கி மனிதன் வெற்றி காணவில்லை. மனித உற்பத்திக்கு உயிரணு அல்லது மரபணு என்ற மூலக்கூறு மிக முக்கியம்.
மனைவியோடு சேருவது மட்டும்தான் கணவனின் வேலை இந்த சேர்க்கையே மூலக்கூறு கிடையாது.மனித உடலில் இறைவனால் உற்பத்தி செய்யப்படும் உயிரணுக்கள் இவன் இச்சையின் மூலம் வெளிப்படுகிறது. அதைக்கருவாக்கும் பொறுப்பை மீண்டும் இறைவன் ஏற்கிறான்.
மனிதன் மனிதனை உருவாக்கும் நிலையிருந்தால் மலட்டுத்தனங்களுக்கு வேலையில்லாமல் போயிருக்கும். ஆனால் நிலைமை என்ன? விஞ்ஞான வளர்ச்சியில் உலகை வென்று நிற்கிறோம் என்று புகழ்பாடும் இந்தக்காலத்தில் கூட குழந்தை தேடும் தம்பதியர் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னவோ எல்லோருக்கும் குழந்தை செல்வம் கிடைத்து தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பது போன்று குடும்பக் கட்டுப்பாடு பற்றி கவலைப் படுகின்றன உலகில் உள்ள சில அரசாங்கங்கள்.
யாருக்கு எந்த பாலினத்தில் எத்தனைக் குழந்தையைக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானிப்பது இறைவன்தான்.
(இறைவனாகிய) அவன்தான் தான் விரும்புவோருக்கு பெண்குழந்தைகளையும், தான் விரும்புவோருக்கு ஆண் குழந்தைகளையும், விரும்புவோருக்கு ஆண், பெண் குழந்தைகளையும் சேர்த்துக் கொடுக்கிறான். தான் விரும்புவோரை மலடுகளாகவும் ஆக்கி விடுகிறான் நிச்சயமாக அவன் மிக்க அறிந்தவன், பேராற்றல் உள்ளவன். (அல்குர்ஆன்-42:49,50)
இநத வசனத்தை சிந்தியுங்கள், குழந்தை உருவாக்கத்தில் மனித பங்குக்கு வேலையில்லை என்பதை அறிவிக்கிறது.
கருவறை என்பது ஒரு மகத்தான உற்பத்திக்கூடம், அதை சிதைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. சில காரணங்களால் குழந்தை தற்காலிகமாக தேவையில்லை என நினைப்பவர்களுக்கு மட்டும் தற்காலிக சாதனங்களை (நிரோத் போன்றதை) இஸ்லாம் அனுமதிக்கிறது.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவரகள் வாழ்ந்த காலகட்டத்தில், குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடும் எண்ணம் உள்ளவர்கள் ஒரு வழிமுறையைக் கையாண்டார்கள், உடலுறவின் உச்சத்தில் இந்திரியத்தை மனைவியின் கருவறையில் செலுத்தாமல் எடுத்து வெளியில் விட்டுவிடும் முறையைக் கடைப்பிடித்தனர். இதை அரபியில் அஸ்ல் என்று கூறுவர்.
நாங்கள் குர்ஆன் இறைவன் புறத்திலிருந்து இறைத்தூதருக்கு இறங்கிக் கொண்டிருந்த  காலத்தில் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம். என நபித்தோழர் ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இறைத்தூதரே! எனக்கு அனுமதிக்கப்பட்டவள் கர்ப்பம் தரித்து விடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன் என்று ஒரு மனிதர் கூறினார், அதற்கு இறைத்தூதர் அவர்கள் அஸ்ல் (உச்சத்தில் இந்திரியத்தை எடுத்து வெளியில் விட்டு) செய்துக் கொள் (ஆனால்) அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை அடைந்தே தீரும் என்றார்கள் என நபித்தோழர் ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்கள்: புகாரி, அபூதாவூத், அஹ்மத்
இந்த நிகழ்ச்சிகளின் மூலம் மனித திருப்திக்காக தற்காலிகமாகக் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடலாம் என அனுமதி விளங்குகிறது. அன்றைய அஸ்ல் முறையையே இன்றைக்கு நாம் நிரோத் போன்ற சாதனங்கள் மூலம் செய்கிறோம். இதற்குத் தடையில்லை ஆனாலும் என்னதான் மனிதன் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடும் வழிமுறையைக் கடைப்பிடித்தாலும் இறைத்தூதரின் வாக்கு மெய்ப்பிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இறைத்தூதர் அஸ்ல் செய்ய அனுமதித்தப் பிறகு சொன்ன வார்த்தை ”அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை அடைந்தே தீரும்”
மெய்ப்பிக்கப்பட்ட இந்த வார்த்தைக்கு காட்சிப் பகர்கிறது இன்றைய நிகழ்வுகள், பாண்டிச்சேரியில் மிக நீண்டகாலமாக ஆணுறை அணிந்து இல்லறத்தில் ஈடுபட்ட தம்பதிகளுக்கு குழந்தை உருவாகிப் பிறந்து, தாம் பயன்படுத்திய சாதனத்தின் பலவீனத்தை நினைவூட்டும் விதமாக குழந்தைக்கு நிரோத் என்று பெயர் வைத்து அதை ஒரு மன்றத்தில் சொல்லி, செய்தித்தாள்களில் படித்தோம். அதன் பிறகு ஆணுறைகள் நவீன ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோது உயிரணுக்கள் உள்ளே செல்லும் அளவிற்கு மிக நுண்ணிய துளைகள் இருப்பது நிருபிக்கப்பட்டது.
எந்த வழிமுறையைக் கடைபிடித்தாலும் இறைவன் தான் நாடுவதை படைத்தே தீருவான் என்பது மட்டும் உண்மை. ஆணுறையைப் போன்று சாதனங்களின் பலவீனங்களைக் காரணம் காட்டி- கருப்பையை எடுத்து விட்டால் பிரச்சனைத் தீர்ந்து விடுமே என்ற அடுத்தக்கேள்வி எழலாம்.
முன்னரே பதில் கண்டோம். இன்னும் விளங்க வேண்டுமானால் குழந்தைப் பாசத்தை உணர்ந்தப் பெண்மணிகள் இதற்குப் பதில் கூறுகிறார்கள். ‘இந்த அரசாங்கங்கள் ஒரு குழந்தை, இரண்டு குழந்தை போதும் என்கின்றன. இந்தக் குழந்தைகள் கடைசிவரை உயிரோடு இருக்கும் என்று அரசுகளால் உத்திரவாதம்  கொடுக்க முடியுமா? இவர்களின் பேச்சை அறுத்துப் போட்டு விட்டால் நாளைக் குழந்தைகளை இழக்கக்கூடிய சூழ்நிலை வந்தால் என்ன செய்வது? அப்போது அரசு எங்களுக்கு என்ன பதில் கூறும்?’
மக்கள் தொகை பெருக்கத்தைக் காரணம் காட்டி குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்தும் ஒவ்வொருவரும் அப்பெண்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பொறுப்பேற்க வேண்டும். குடும்பக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து குழந்தைப் பிறப்பை தடுக்கக்கோரும் ஒவ்வொருவரும் அவர்களின் பிறப்புப் பற்றி யோசிக்கட்டும். அன்றைக்கு வறுமை- திண்டாட்டம் போன்ற காரணங்களால் இவர்களின் பெற்றோர்கள் இவர்களைப் பெறாமல் இருந்திருந்தால்…?
கோணங்கள் வேறுபட்டு சிந்திக்கும் போதெல்லாம் குடும்பக்கட்டுபாட்டின் கெடுதிகளை உணரமுடியும்.
யாதார்த்தங்களும்- தீர்வுகளும்
இப்பிரச்சனையில் மருத்துவத்தோடு சமூகமும் சார்ந்து இருப்பதால்- முஸ்லிம்கள் குடும்பக்கட்டுப்பாட்டை புறக்கணிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருப்பதால் – அதையும் விளக்கும் அவசியம் ஏற்படுகிறது. காடுகளின் வளம் மற்றும் உற்பத்தி, விலங்குகள் வளம்- உற்பத்தி என்று உற்பத்திகளுக்காக அரும்பாடுபடும் மனிதன், இவைகளை உற்பத்தி செய்யும் திறனோடு பிறக்கும் மனிதனை மட்டும் கருவறுக்கப் பார்க்கிறான்.
கட்டு மீறும் மக்கள் தொகை, கட்டுப்பாடு தேவை போன்ற வார்த்தைகள் பயத்தின் காரணத்தாலோ, சமூக அக்கறைக்கான தம் சிந்தனையின் விளைவாகவோ ஏற்படுகின்றன. இடநெருக்கடி வேலையில்லாத் திண்டாட்டம், பசி, பட்டினி, வறுமைபோன்ற உலகை உலுக்கும் போக்கிற்கு மக்கள் தொகைதான் காரணம் என்ற எண்ணம் இவர்களை சட்டென்று பற்றிக் கொள்கிறது. உலகை அச்சுறுத்தும் வறுமை, பசி. பட்டினி, வேலையின்மை போன்றவற்றிற்கு மக்கள் தொகைதான் காரணம் என்றால் உலகிற்கு மக்கள் தொகை தேவையாக இருந்த ஆரம்ப காலகட்டத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தக் கொண்டிருந்தது என்பதை இவர்களால் நிருபிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏனெனில் பிரச்சனை மக்கள் தொகையில் இல்லை. உலக வளங்களை பகிர்ந்தளிப்பதில் ஏற்படும் கோளாறில்தான் இருக்கிறது.
இன்றைக்கு இருக்கும் மக்கள் தொகையை சரிபாதியாகக் குறைத்தாலும் அப்போதும் மக்கள் தொகைக் கட்டுபாடு பற்றிய உலக மாநாடுகளும் கருத்தருங்குகளும் நடைபெறத்தான் செய்யும். காரணம் வினியோக முறைக் கோளாறுகள்தான். உலக உற்பத்தி- இயற்கை வளங்களில் எத்தகையக் குறைச்சலும் இல்லை. இன்று இருப்பது போன்று இன்னும் ஒரு பங்கு மக்களுக்கான உணவு மற்றும் இதர வாழ்வாதாரத் தேவைக்கான பொருள்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவை தனி மனித ஆக்ரமிப்புகளில் மூழ்கிக் கிடக்கின்றன. தலைமுறைகளையோ, உலக ஆளுமை வாதத்தையோ மையப்படுத்தி தனி மனிதர்கள் முடக்கிப் போட்டுள்ள வளங்களை உலகிற்குப் பகிர்தளித்தால் பின்னர் வறுமை எங்கே? தேடும்நிலைதான் உருவாகும்.
உலக நெருக்கடிக்கான காரணங்கள்
1. முதலாளித்துவம்
வறைமுறையற்ற சொத்து ஈர்ப்பில் பங்கு பெறும் மேற்கத்திய வல்லரசுகளின் முதலாளிகள் தமக்குக்கீழ் பெருவாரியான உற்பத்தி, இயற்கை வளங்களை முடக்கிப் போட்டுள்ளார்கள். உலகில் ஏறத்தாள 400 பில்லியனர்களிடம் இருக்கும் சொத்து இதர உலகமக்கள் எல்லோருடைய சொத்தை விடவும் அதிகம். மூன்றாம் உலகநாடுகளில் மக்கள் பஞ்சத்தால்- பசியால் வாடிக்கொண்டிருக்கும்போது வளர்ச்சிப் பெற்ற நாடுகள் பொருள்குவிப்பு என்ற ஊளைச் சதையால் வீங்கிக் கொண்டிருக்கின்றன.
ஏழைகள் மேலும் தேய்ந்து ஏழையாவதும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும் கடந்த பத்து ஆண்டுகளில் அதிவேக இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இதே போக்கு நீடித்தால் என்னதான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினாலும் குறுகிய காலத்தில் கொடிய வறுமை உலகைப் பிடித்து உலுக்கும்.
1990 களின் துவக்கத்தில் பொருளாதார வரலாற்றின்படி மேல்தட்டு ஐந்து சதவிகிதத்தினரின் சராசரி குடும்ப வருமானமாக மாதம் ஒன்றிற்கு 1,83,000 அமெரிக்க டாலர்களைப் பெற்றுள்ளனர். அதே காலகட்டங்களில் கீழ் குடிமக்களின் (வளர்ந்த நாடுகளில்) மாத வருமானம் வெறும் 8000 டாலர்களே. வளர்ந்த நாடுகளின் நிலையே இதுவென்றால் ஏழை நாடுகளின் நிலை படு வீழ்ச்சியாகவுள்ளது.
பல நாடுகளில் உள்நாட்டுக் குழப்பம், நெருக்கடி, யுத்தம் என்று அபாயங்கள் தோன்றுவதற்கு மொத்தக் காரணமும் முதாலாளித்துவத்தின் வரையறையற்ற பொருள் ஈர்ப்பின் அன்பளிப்புகள்தான். வளரும் அல்லது வளர வழி தேடும் எந்த நாடாக இருந்தாலும் அவை தன் நாட்டு வறுமையை ஒழிப்பதை விட இறையாண்மை என்ற பெயரில் ராணுவத்திற்கு முக்கித்துவம் கொடுத்து செலவிடுகிறது. உலகில் ராணுவங்களுக்காக செலவிடப்படும் தொகையை ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டும் வறுமை ஒழிப்பின் பக்கம் திருப்பினால் மக்கள் செழித்து நிற்பார்கள். அடுத்தவர்களை அச்சுறுத்தி, சுரண்டி வாழும் முதலாளித்துவம் இதிலெல்லாம் கவனம் செலுத்தாது, காரணம் அதனுடைய பலமே அங்குதான் குவிந்து நிற்கின்றது. எனவே உலகில் வறுமை, திண்டாட்டம், பஞ்சம் போன்றவற்றிற்கு மனிதாபிமானமற்ற முதாலாளித்துவம்தான் முதல் காரணமே தவிர மக்கள் தொகையல்ல.
2. வீணாகும் வளங்கள்
அ. உற்பத்தியாகும் வாழ்வாதாரப் பொருள்களில் கணிசமானவை வினியோகக் கோளாறுகளால் பாழ்பட்டுப் போகின்றன. வளர்ந்த நாடுகள் லட்சக்கணக்கான லிட்டர் பாலையும், டன் கணக்கானக் கோதுமையையும் மீதமாகிவிட்டது அல்லது கெட்டுப்போய்விட்டது என்ற சமாதானங்களுடன் கடலில் கொண்டு போய் கொட்டுகின்றன. ஏதோவொருமுறை இப்படி நடக்கிறதென்றில்லை இது அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சி.
ஆ. உலக வர்த்தக சந்தை ( பெரும் சூப்பர் மார்கெட் முதல் சாதாரண கடை) களில் பயன் படுத்தும் தேதி முடிந்துபோய் தூக்கி வெளியில் வீசப்படும் உணப்பொருள்கள். இவை எரிபொருள்களைப் போன்று பல ஆண்டுகள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் தன்மையுடையதல்ல. (ஒரு சிலது மட்டுமே விதி விலக்குபெரும் அவை குறைந்த உற்பத்தியில் இருக்கும்) போதிய கால இடைவெளிகளில் வினியோகிக்கப்பட வேண்டும் இல்லையெனில் எவருக்கும் பலனில்லாமல் தூக்கி வீசும் நிலைதான் ஏற்படும். பல ஆண்டுகளாக இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது.
இ. நமது நாட்டின் மக்கள் தொகை நூறு கோடியைத்தாண்டியுள்ளது 123 மாவட்டங்கள் இன்னும் பின் தங்கியே உள்ளன. 32கோடி பேர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். இத்துனை நெருக்கடியிருந்தும், கல்வியறிவோ, மக்கள் மீதான அக்கறையோ இல்லாத மக்கள் பெருவாரியான உணவுப்பொருள்களை இங்கு பாழ்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மதம் மற்றும் அரசு சார்ந்த விழாக்கள், திருமணம் போன்ற ஆடம்பர நிகழ்ச்சிகள் இவைகளில் பறிமாறப்படும் விருந்துகளில் வீணாக அல்லது தேவைக்கு அதிகமாகி வீசப்படம் உணவுகள் கணக்கில் அடங்காதவை.
ஓராண்டில் நமது நாட்டில் வீணாக்கப்படும் உணவுப்பொருள்களைச் சேமித்தால் 12கோடி பேர் ஓராண்டு முழுவதும் மூன்று வேளையும் சாப்பிட முடியும். மத்திய உணவுத்துறையின் கணக்குப்படி இவ்வாறு வீணடிக்கப்படும் உணவுப்பொருள்களின் மதிப்பு பத்தாயிரம்கோடி ரூபாய் என மக்கள் நல ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இப்படியாக உலக வாழ்வாதார வளங்கள் கோடிக்கொடியாக பாழ்பட்டுக் கொண்டிருக்குபோது மொத்த உலக அரசும், தொண்டு நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்தி தீர்வு காண்பதுதான் அறிவுடமை. இதைவிடுத்து மக்கள் பெருக்கத்தை காரணம் காட்டுவது எவ்வகையிலும் பொருத்தமற்ற வாதமாகும்.
முஸ்லிம்களைப் பொருத்தவரை அவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள்போல் சித்தரிக்கப்படுகிறது. அவர்கள் சார்ந்த இறைநம்பிக்கை அவர்களை இவ்வாறு ஊக்கப்படுத்தினால் அதை எவரும் குறை சொல்லமுடியாது.
ஏனெனில்,
வறுமைக்குப்பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள், அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். என்கிறது அல்குர்ஆன்(6:51,17:31)
வறுமையைக் காரணம் காட்டி மக்கள் தொகையை மட்டுப்படுத்த நினைப்போர் இன்னொரு கோணத்திலும் சிந்திக்க வேண்டும். பிறக்கும் எந்தக் குழந்தையும் வெறும் வயிற்றுடன் மட்டும் பிறப்பதில்லை. அறிவும் கொடுக்கப்பட்டுத்தான் பிறக்கின்றன. உயர்தரக் கல்வியால் அக்குழந்தையின் அறிவை நாம் மேம்படுத்தினால் அதில் ஒருவன் கடின நெருக்கடிகளுக்கு சுலபமான வழியைச் சொல்லும் ஆற்றலுடன் வந்து விடுவான். பிரச்சனைகளை சந்திக்கும்போதுதான் மனிதன் தனது ஆழ்ந்த அறிவின் மூலம் பல நவீன வழிமுறையை உலகிற்குக் கற்றுக் கொடுத்துள்ளான், வாகனங்கள், வானஊர்திகள், தொலைத் தொடர்பு சாதனங்கள், அதிவேக செயலாக்கம் மிக்க இயந்திரங்கள் என்று நவீனத்துவம் பெருகியதற்கு நெருக்கடிகள்தான் காரணம்.
கடல் நீரும், கழிவு நீரும் கூட குடிநீராய் மாறும் விந்தைகளும், கண்ணிமைப்பொழுதில் ஆடு, கோழி, முட்டைப் போன்ற இனப்பெருக்கங்களும், சுலபத்தில் மகிழ்ச்சியான அறுவடைகளும் உலகிற்குக் கிடைப்பதற்கு காரணம், நெருக்கடிதான். இன்னும் நெருக்கடி ஏற்படும்போது அது மனித வாழ்க்கையின் வசதி வாய்ப்பைத்தான் அதிகப்படுத்துமே தவிர குறைக்காது.
மாற்றப்பட வேண்டியது மக்கள் தொகையல்ல மனித மனங்கள்தான்.
Advertisements

3 பதில்கள் to “குடும்பக் கட்டுப்பாடு”

  1. எனக்கு கூட இந்த சந்தேகம் இருந்தது.இப்போது இல்லை.சில இடங்களில் ஒன்றும் அறியாக ஏழை மக்கள் குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேசனுக்கு வலுக்கட்டாயமாக ஆட்படுகிறார்கள் என கேள்வி பட்டிருக்கின்றேன்.அதை கண்டிப்பா தடுக்கனும்.

  2. […] https://tamilmuslim.wordpress.comகுடும்பக் கட்டுப்பாடு […]

  3. […] Source : https://tamilmuslim.wordpress.comகுடும்பக் கட்டுப்பாட… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: