தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

இஸ்லாமும் ஆணாதிக்கமும் (பு தொ 4)

Posted by tamilmuslim மேல் பிப்ரவரி 14, 2008

இஸ்லாமும் ஆணாதிக்கக் குற்றச்சாட்டுகளும்.

எது பெண்ணுரிமை புத்தகத் தொடர் – 4

தஸ்லிமா, விவாகரத்துப் பிரச்சனையில் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த பாதிப்பு தஸ்லிமாவை சூடேற்றியுள்ளதால், அந்த சூடேற்றத்தை இன்னும் அதிகப்படுத்த சில பத்திரிக்கைகள் களத்தில் இறங்கி, விவாகரத்து என்பது ஆணாதிக்கம் என்று உளறிக் கொட்டியுள்ளதால் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி இல்லாத சிலர், குறிப்பாக பெண்கள் பஜனைப் பாடுவதால் அது சம்மந்தமாக தெளிவுபடுத்துவது நம்மீது கடமையாக இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் முதலாவதாக திருமணம் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொண்டால் விவாகரத்தின் எதார்த்தத்தை நாம் புரியலாம்.

இஸ்லாம் திருமணத்தை ஒரு வாழ்க்கை ஒப்பந்தமாகக் கூறுகிறதே தவிர பிரிக்கவே முடியாத உடன்படிக்கையாகக் கூறவில்லை. இதை அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஸாவின் 21வது வசனத்திலிருந்து (4:21) அறியலாம்.

திருமணத்தின் நோக்கம் ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்துகொள்ளுதல், காம இச்சையைத் தீர்த்தல், சந்ததிகளைப் பெருக்குதல் ஆகியவையாகும். இதை இஸ்லாம் உட்பட எல்லா சமயத்தவரும் ஏற்றுக் கொள்வார்கள். திருமணத்திற்கான இந்த அடிப்படை நோக்கத்தில் ஏதாவது கருத்து வேறுபாடோ அல்லது குழப்பமோ ஏற்படும்போது குடும்பத்தில் நிம்மதி குலைகிறது. கணவன்-மணைவிக்குள் அடிக்கடி சண்டைச் சச்சரவு ஏற்படுகின்றன. இந்நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு மத்தியில் திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ஒரு சில அவகாசம் கொடுப்பதே தலாக் என்ற சட்டமாகும்.

ஒருவனுக்குத் தன் மனைவியைப் பிடிக்காவிட்டால் அவன் தன் மனைவியைத் தலாக் சொல்லி பிரியலாம் என்ற உரிமையை இஸ்லாம் ஆண்களின் கையில் கொடுத்திருப்பது உண்மைதான். அதை ஆண்களின் கொடுப்பதுதான் நியாமும்கூட. எப்படி என்று பின்னர் விளக்குவோம்.

ஆண்கள் கையில் தலாக் பிரச்சனை கொடுக்கப்பட்டதால் அவன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலாக் விட்டு, விட்டு ஓடிவிடலாமா? என்றால் அதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆண்கள் கையில் தலாக் உரிமையைக் கொடுத்த அல்லாஹ், அதை விரும்பித்தான் கொடுத்தானா என்றால் !இல்லை! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் அனுமதித்த (ஹலாலாக்கிய) விசயங்களில் அவன் ஒரு செயலை வெறுக்கிறான் என்றால் அது தலாக்தான் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்

அல்லாஹ் அனுமதித்துவிட்டு வெறுக்கிறான் என்பதிலிருந்தே தலாக் விடுபவர்கள் எவ்வளவு பெரிய தவறு செய்கிறார்கள். இறை வெறுப்பிற்கு ஆளாகிறார்கள் என்பதை விளங்கலாம்.

இறைவன் வெறுத்தால்கூட ஒரு சில சந்தர்ப்பங்களில் தம்பதிகள் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றது. சாதாரணமாக சமய வேறுபாடின்றி பல்வேறு குடும்பங்களில் இதைக் காணலாம்.

அடுத்த வீட்டுப் பெண்ணின் வசதியான வாழ்க்கை, ஆடம்பரமான உடைகள் இவைகளைப் பார்க்கக் கூடிய பெண்கள், தாங்களும் இப்படி வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தம் கணவன்மார்களிடம் கேட்பதும், ஆண்கள் அதை மறுப்பதும், இதனால் குடும்பத்தில் சண்டைகள், குழப்பங்கள் ஏற்படுவதையும் நாம் காண்கிறோம்.

போதிய வருவாயின்மை, பெண்களிடம் ஏற்படும் கோளாறுகள், கணவனுக்கு அடங்கி நடக்காத தன்மை, இஸ்லாம் சொல்லும் வரம்பை மீறிச் செயல்படுதல், இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் கணவன் தன் மனைவி மீது அதிருப்தி கொள்கிறான். அல்லது இந்தக் காரணங்கள் இல்லாவிட்டால்கூட வேறு பல காரணங்களுக்காக மனைவியை பிடிக்காமல் போய்விடுகின்றது. இந்நிலை ஏற்படும்போது அந்த மனைவியிடமிருந்து விடுதலை பெறவே கணவன் ஆசைப்படுவான். அந்த விடுதலையின் நோக்கமே தலாக்காகும். அதாவது.. திருமண ஒப்பந்த முறிவாகும்.

ஒரு ஆண் தன் மனைவியைப் பிரியவேண்டும் என்று முடிவெடுத்தால், எடுத்த எடுப்பிலேயே அதைச் செய்துகொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை. வாழ்க்கை என்பதே பிரச்னைகளின் வடிவம்தான். இல்லற வாழ்க்கையில் ஆண் பெண்ணின் இயல்பு ஒரே விதத்தில் இருக்காது. மணநிலை என்பது மாறக் கூடிய தன்மையைப் பெற்றதாகும் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு ஆண்களுக்கு சில வரையறைகளை இஸ்லாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த வரையறைகளைக் காண்போம்….

மனைவிகளுக்கு உபதேசம் செய்தல்

திருமறை கூறுகின்றது:…
அப்பெண்கள் உங்களுக்குக் கட்டுப்பட மாட்டார்கள் என்று நீங்கள் பயந்தால் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (4:34)

இது மிகச் சிறந்த அறிவுரையாகும் !! விசுவாசிகளுக்கு நல்லுபதேசம் பயனளிக்கும் !! என்ற இறை கூற்றுக்கு ஒப்ப, அவர்களுக்கு உபதேசம் – நற்போதனை செய்வது, அவர்களைத் திருத்தி இஸ்லாத்தில் மேலும் இணக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு மனைவி தன் கணவனின் சொல்லுக்கு மாறு செய்கிறாள் என்று வைப்போம், அப்போது அந்த கணவன் அவள்மீது கோபம் கொண்டு தலாக் கூறி இத்தாவிற்குப் பிறகு தன் தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் அவளது வாழ்க்கை பாழ்பட்டு போய்விடும். இதைக் கணவன் அவளுக்கு நல்லுபதேசமாக எடுத்துச் சொல்ல வேண்டும். இதுமட்டுமின்றி அவரவர்களுக்கு எது எது நல்லுபதேசமாகத் தெரிகிறதோ அதையெல்லாம் சொல்லலாம்.

உதாரணமாக:… எதிர்காலம் பற்றிய அச்சம், குழந்தைகளின் பராமரிப்பு, வாழாவெட்டி என்ற வதைச் சொல் இவைகளால் அவள் சந்திக்கப் போகும் துயரங்கள் இவைகளைக் கூறுவது நல்லுபதேசமாகும். இத்துனை பாதிப்புகளையும் ஒரு பெண் சிந்தித்துப் பார்ப்பாளேயானால் நிச்சம் அவள் தன் கணவனுக்கு மாறு செய்து நடக்காமல் தன்னைத் திருத்திக் கொள்வாள். தலாக்கிற்கு முன்னால் இஸ்லாம் வழங்கும் முதல் அறிவுரையாகும் இது. இந்த உபதேசத்திற்கு அவள் கட்டுப்படாவிட்டால், அடுத்த ஒரு அறிவுப்பூர்வமான வழிமுறையை இஸ்லாம் காட்டுகிறது.

மனைவியைப் படுக்கையை விட்டும் நகர்த்துங்கள்

கணவன் என்னதான் உபதேசம் செய்தாலும் சில பெண்கள் அடங்கமாட்டார்கள். இதற்கு காரணம் இரவு நேர இல்லற வாழ்க்கைதான். என்னதான் கணவன் தன்னைத் திட்டினாலும், பயமுறுத்தினாலும் இரவு வந்ததும் கணவன் தன்னிடம் சரண் அடைவான் – அவனை முந்தானையில் முடித்துக் கொண்டு காரியத்தைச் சாதித்து விடலாம் என்ற எண்ணம் பலருக்கு உண்டு. இன்னும் சொல்லப் போனால் இந்த எண்ணத்திலிருந்து விதிவிலக்குப் பெற்ற பெண்களே இல்லை என்றுகூட கூறலாம். நமது ஆண்களும் அந்த விசயத்தில் பெட்டி பாம்பாக அடங்கிப் போவதையும் காண்கிறோம். அல்லாஹ் இந்த விசயத்தில் கட்டுப்பட்டுவிட வேண்டாம் என்று ஆண்களுக்குக் கூறுகின்றான்.

அவர்களைப் படுக்கையிலிருந்து தள்ளி வையுங்கள் (அல் குர்ஆன்- 4:34)

பகலில் வீராவேசமாகப் பேசும் ஆண், இரவில் அவளிடம் அவன் சரணடைவதிலிருந்து அவளது இறுமாப்பு கூடுகின்றது. இப்போது இறைக்கட்டளையை ஏற்று படுக்கையிலிருந்து தன் மனைவியை ஒதுக்கினால் கணவனின் கண்டிப்பை தனது முந்தானை வலையில் முடியலாம் என்னும் தனது எண்ணம் பலவீனமானது என்பதை அவள் உணர்வாள். படுக்கையிலிருந்தே தன்னை ஒதுக்கிய கணவன் வாழ்க்கையிலிருந்தும் தன்னை ஒதுக்கி விடுவான் என்ற எண்ணம் அவள் மனதில் பயத்தை ஏற்படுத்தும். படுக்கையிலிருந்து கணவன் தன்னை நகர்த்திவிட்டான் என்ற செய்தி வெளியில் தெரிந்தால் தனது மானம் பறிபோகும் என்ற நிலைக்கு அவள் தள்ளப்படுவாள். இவைகளை உணரக் கூடிய பெண் தன் கணவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுவிடுவோம் என்ற நிலைக்கு வருவாள். பிறகு குடும்பம் சீரமைப்பு பெறும்.

இதற்கும் சில பெண்கள் கட்டுப்பட மாட்டார்கள். காரணம்… செக்ஸ் வாழ்வு மீது தன் கணவனுக்கு உள்ள ஈடுபாடும், பலவீனமும். !இந்த மனுஷன் எத்தனை நாளைக்குத்தான் தனியாக இருப்பான் பார்ப்போமே…! என்ற பலமான எண்ணத்தில் தொடர்ந்து தனது பிடிவாதப் போக்கை மேற்கொள்வார்கள். அப்படி ஒரு நிலை ஏற்படும்பொழுது இஸ்லாம் மற்றுமொரு அறிவுரையை ஆண்களுக்குக் கூறுகிறது.

அவர்கள் திருந்துவதற்காக (இலேசாக) அடியுங்கள் (அல்குர்ஆன் – 4:34)

நல்லுபதேசத்திற்குக் கட்டுப்படாத மனைவியைப் படுக்கையிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட பிறகும் திருந்தாத மனைவியை, உடலில் சிறு நோவினையின் மூலம் திருத்தலாம் என்ற நோக்கில் அடிக்கலாம் என்பதை இஸ்லாம் கூறுகிறது. மனைவியை நோக்கிக் கணவன் கைநீட்டிவிட்டால் நிச்சயம் மனைவிக்கு உள் அச்சம் வரும். உபதேசம் செய்தார், படுக்கையிலிருந்து விலக்கினார் இப்போது அடிக்கும் நிலைக்கும் வந்து விட்டார் – இனியும் நம் போக்கில் நாம் இருந்தால் நம் உடல் நிச்சயம் பாதிப்புகளைச் சந்திக்க வேண்டி வரும் என்ற எண்ணத்தில் அவள் கணவனுக்குக் கட்டுப்படுவாள்.

அடித்த பிறகும் பெண்கள் அடங்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இனி அவ்விருவரும் சேர்ந்து வாழ்வதில் எந்த புண்ணியமும் இல்லை. பிரிவதே சிறப்பு என்பதை எவரும் உணரலாம். ஆனாலும், வாழ்க்கையின் அவசியத்தை, தலாக்கினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பை உணர்த்த இறைவன் கடைசியாக மிகவும் அறிவுப்பூர்வமான ஒரு சட்டத்தைக் கூறுகின்றான்.

கணவன் மனைவிக்குள் பிரிவு ஏற்பட்டேயாகும் என்று அஞ்சுவோர், அவருடைய குடும்பத்திலிருந்து ஒரு அறிவாளியையும், மனைவியின் குடும்பத்திலிருந்து ஒரு அறிவாளியையும் நடுவராக ஏற்படுத்தி (அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி) இணக்கத்தை ஏற்படுத்த விரும்பினால் அல்லாஹ் ஒற்றுமையை உருவாக்கி விடுவான். அல்குர்ஆன் – 4:35)

இது ஒரு மிகப் பெரிய அறிவுத் திட்டம். கோபமாக மனதாபமுள்ள இருவர் நேரடியாகச் சந்தித்துக் கொள்ளும்போது அங்கு நியாயம் வீழ்த்தப்பட்டு கோபமான வாதங்களே மேலோங்கும். இதை சாதாரணமாக எல்லா இடங்களிலும் காணலாம். அதேபோன்று, மனக்கசப்புக்கு உட்பட்ட கணவன் – மனைவியும் சந்தித்துப் பேசிக்கொள்ளும்போது மேலும் மேலும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் நிலைதான் ஏற்படும். ஒரு தீர்வு கிடைக்காது என்பதால்தான் இறைவன், பிரச்சனையில் சம்பந்தப் படாத இரு அறிவாளிகளை, கணவனுக்குச் சார்பாக ஒருவரையும் மனைவிக்குச் சார்பாக ஒருவரையும் ஏற்படுத்தி அவர்கள் இருவரும் கலந்து பேசி இணக்கமாக ஒரு முடிவுக்கு வந்து, கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை ஏற்று வைக்கச் சொல்கிறான்.

தலாக் சொல்வதற்கு முன்னால் இவ்வளவு பெரிய விரிவான அறிவுத்திட்டத்தை இஸ்லாம் சொல்கிறது. இந்த நடுநிலைக் குழுவின் முயற்சியும் தோல்வி அடைந்தால் அதன் பிறகு பெயரளவில் அந்தக் கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதில் என்னதான் புண்ணியமிருக்கிறது? அறிவு ஜீவிகளே பதில் கூறுங்கள்? முற்போக்குவாதிகளே முடிவு சொல்லுங்கள்!

இவ்வளவு முயற்சிக்கும் பிறகுதான் இஸ்லாம் விவாகரத்து (தலாக்) என்ற தீர்வைப் பயன்படுத்தச் சொல்கிறது. எத்துனை அறிவுரைகள், எத்துனை பயமுறுத்தல்கள் இத்தனையையும் துச்சமென மதிக்கும் தஸ்லிமாக்களும், அவரைப் போன்றோரும் இல்லறத்திற்கு லாயக்கற்றவர்கள் என்ற நிலை வரும்போது அந்தப் பெண்களோடு உள்ள தொடர்பை விவாகரத்து மூலம் ஆண் நீக்கிக் கொள்கிறான். இதை ஆண் ஆதிக்கம் என்று எழுதும் எந்தப் பத்திரிக்கையாளரும் சுய புத்திக்கு அப்பாற்பட்டவர்கள் என்றுதான் கருத வேண்டும்.

ஆண்கள் கையில் தலாக் என்ற ஒரு சட்டத்தை இஸ்லாம் கொடுக்காவிட்டால், அதன் பின்விளைவு பெண்களை முற்றிலும் அழிக்கும் – கொடுமைப்படுத்தும் ஒரு நிலையை உருவாக்கும் என்பதை மாதர் சங்கங்களும், பெண்ணுரிமை இயக்கங்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா!

தன் மனைவியோடு வாழப்பிடிக்காத ஒருவன், அவளது நடவடிக்கைகளைச் சகித்துக்கொள்ள முடியாத ஒருவன், அவளோடு இல்லறத்தில் ஈடுபடுவதையே கசப்பாக நினைக்கும் ஒருவன் உடனடியாக ‘விவாகரத்து’ என்று ஒரு நிலை இல்லாவிட்டால் என்ன செய்வான்? அவளிடமிருந்து பிரிய வேண்டும் என்பதற்காக முரட்டுத்தனமாக என்னென்ன முயற்சிகளைச் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வான். காலம் முழுவதும் அடி உதையிலேயே அவள் வாழ்க்கை கழியும். தன் உடல் பசிக்கு ஆள் தேவைப்படும்போது ‘வைப்பு’ என்று பலரோடு தொடர்பு கொண்டு இவளை விட்டு விலகுவான். தான் சம்பாதிக்கும் எல்லாவற்றையும் ‘வைப்பு’ களிடம் கொட்டிக் கொடுத்துவிட்டு இவளை பசி, பட்டினியால் வாட்டுவான். அவள் தட்டிக் கேட்டால், அடியும் உதையும் சேர்த்து அவளை இம்சிக்கும். கணவனுக்கு எதிராக இவள் ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அவளைத் தீர்த்துக்கட்டவும் அவன் தயங்கமாட்டான். கடின சித்தமுடைய ஆணிடம் பலவீன தன்மையைக் கொண்ட பெண் எவ்வளவு காலத்திற்குத்தான் தன் எதிர்ப்பைக் காட்ட முடியும். உடனடியாக விவாக விலக்கு பெறமுடியாத சமூகங்களில், மண்ணென்ணை ஊற்றிக் கொளுத்தப்பட்டப் பெண்களின் பட்டியலும், ஸ்டவ் வெடித்து இறந்த பெண்களின் பட்டியலும், விஷம் வைத்துக் கொள்ளப்பட்ட பெண்களின் பட்டியலும், தூக்குப் போட்டு தன் வாழ்வை முடித்துக்கொண்ட பெண்களின் பட்டியலும் பல ஆயிரக்கணக்கில் தொடர்ந்து கொண்டிருப்பதை நடுநிலையாளர்கள் எவரும் மறுக்க முடியாது.

விவாகரத்தை மறுப்போர், அது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை என வாதிப்போர் தமது மாற்று வழியின் மூலம் பெண்களை முழுமையான அழிவின் பக்கம் கூட்டிச்செல்கிறார்கள் என்பதுதான் பொருள்.

தலாக்கின் மூலம் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நாம் மறுக்கவில்லை. வரதட்சனை அரக்கத்தனம் மிகுந்த காலகட்டத்தில் கன்னிப் பெண்ணின் வாழ்வே கேள்விக் குறியாக இருக்கும்போது வாழாவெட்டிக்கு இன்னுமொரு வாழ்வு எப்படிக் கிடைக்கும்? என்ற கேள்வியில் உள்ள நியாயத்தை நாம் மறுக்கவில்லை. அதே சமயம் ஆண்கள் கையில் ‘தலாக்’ இல்லாத நிலையில் பெண்ணுக்கு ஏற்படும் கொடூரம், அட்டூழியம் ஆகியவற்றோடு தலாக்கினால் ஏற்படும் பாதிப்பை ஒப்பு நோக்கும்போது தலாக்கின் மூலம் விடுதலை பெறும் பெண்ணின் வாழ்க்கை எவ்வளவோ மேல் என்பதை அந்த பெண் உட்பட எல்லோருமே உணரலாம். 

புத்தகம் தொடரும் இறைவன் நாடட்டும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: