தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

இறைவனின் அடியாட்கள்!

Posted by tamilmuslim மேல் மார்ச் 21, 2008

இறைவனின் அடியாட்கள்!

எதுபெண்ணுரிமை!!

எதிரொலி – 1

தஸ்லிமா நஸ்ரின் என்ற முஸ்லிம் பெண் கேட்ட சீர்திருத்தம்? பெண்ணுரிமை? ஆகியவற்றின் கோளாறுகள் குறித்து விளக்கமாக எது பெண்ணுரிமை! என்று ஒரு புத்தகம் வெளிவந்தது. பெண்ணுரிமைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடுகளை ஓரளவு அது விவாதித்திருந்தது. இந்த புத்தகத்திற்கு மிக சில பத்திரிக்கைகள் மறுப்பு கட்டுரை வெளியிட்டிருந்ததை அறிய முடிந்தது. அதில் குறிப்பிடும் படியாக இருந்தது,
அரசியல், பெண்ணியம், கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் தனிக் கருத்துக்களுடன் இயங்கும் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற அமைப்பினர் வெளியிட்ட கட்டுரையாகும். இறை நம்பிக்கையற்றுப்போன இவர்கள் ‘இறைவனின் அடியார்களை’ ‘இறைவனின் அடியாட்கள்’ என்ற தலைப்பிற்கு கீழ் தங்கள் கட்டுரையில் விமர்சித்திருந்தார்கள். எது பெண்ணுரிமை! என்ற வெளியீட்டையும், அதற்கு அவர்கள் எழுதிய விமர்சனக் கட்டுரையையும் நமது இணையத் தளத்தில் தொடராக வெளியிட்டுள்ளோம். ‘இறைவனின் அடியாட்கள்’ என்று விமர்சித்திருந்த அந்த கட்டுரையின் சாதக பாதகங்களை புத்தகத்தின் ஆசிரியர் ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் விளக்கம் அளிக்க முற்பட்டுள்ளார்கள். இதை வாசகர்களின் நலன் கருதி தொடராக இந்த வலைதளத்தில் வெளியிடுகிறோம்.

அவர்களின் விமர்சனங்களை முதலில் வரிசைப்படுத்திக் கொள்வோம்.
1) சமஉரிமை என்பதே சல்லாபச்சொல்லாம். பெண்ணுக்கு சமஉரிமை தர வேண்டும் என்று பேசிய பெரியார் உள்ளிட்ட எல்லோரும் பொருக்கிகள் என்பதுதான் இதன் சாரம். வேறு வார்ததைகளில் சொன்னால் பெண்ணுரிமை இயக்கத்தினரும், பர்தா அணியாத பெண்களும் வேசிகள்.
2) ஆண்கள் பெண்களைவிட ஒருபடி மேல் ; ; (அல்-குர்ஆன் 2 : 228) என்று மேற்கோள் காட்டுகிறார் நிஜாமுத்தீன். ; ; அல்லாஹ்வின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமம் ; ; (அல்-குர்ஆன் 33 : 55) என்கிறார் அஸ்கர் அலி என்ஜினீயர். ; ; குடும்பத்தில் ஒழுங்கு நிலவ வேண்டும் என்றால், ஒரு தலைவன் வேண்டும். அந்தப் பதவியை இஸ்லாம் கணவனுக்குத்தான் கொடுக்கிறது ; ; என்கிறார் மவுதூதி. Towards understanding Islam சைய்யது அப்துல்லா மவுதூதி, ஜமாத்தே இஸ்லாமி. ஏது குர்ஆனின் முடிவு? ஏது இஸ்லாத்தின் வழி காட்டுதல்?
3); இஸ்லாமியச் சட்டங்கள் என்பவையெல்லாம் பெண்களை நசுக்குவதற்கு மட்டும்தான் இந்த நாட்டில் பயன் படுத்தப்படுகின்றன. மற்ற இஸ்லாமியச் சட்டங்களெல்லாம் எங்கே? திருட்டுக்கு கையை வெட்டுவது தானே! கள்ள உறவுக்கு கல்லாலும் பிறம்பாலும் அடிப்பது தானே! இந்த குற்றங்களெல்லாம் ஆண்களுக்கு பழக்கமானவை என்பதால் தானே ஆணாதிக்கவாதிகளான தலைவர்கள் இவற்றை அமல்படுத்தவில்லை?
4) தஸ்லீமா கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? ஷாபானு என்ற ஒரு ஏழைப்பெண்ணின் ஜீவனாம்சத்தை நிறுத்த நாடெங்கும் ஆர்பாட்டம் நடத்திய முஸ்லிம் மதவாதிகள் அதற்கு என்ன காரணம் சொன்னார்கள்? உச்ச நீதிமன்றம் இஸ்லாமிய சட்டத்திற்குள் வரம்புமீறி தலையிடுகிறது என்றார்கள். மத உரிமை பறி போய் விட்டதாக கூக்குரலிட்டார்கள்.இந்திய துணைக்கன்டம் முழுவதிலும் இஸ்லாமிய சொத்துரிமைச் சட்டம் அமல்படுத்தப்படுவதில்லை என்று ஒப்புதல் வாக்கு மூலம் தருகிறார் மவுதூதி! ஷாபானுவிற்;கு எதிராக பிளந்த வாய்கள் ஏன் மவுனம் சாதிக்கின்றன?
5) ஒரு பெண் தானாகவே கூடுதல் சுமைகளை ஏற்க முன் வந்தால் அனுமதிக்கலாமா? தாராளமாக என்கிறார் நிஜாமுதீன், டாக்டர் ஆகலாம், என்ஜினியர் ஆகலாம்,போலீசாகலாம், தடையே கிடையாது ஆனால் பர்தா உஷார் என்கிறார். பார்சிலேனா ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் தங்க பதக்கம் வென்ற ஹசீனா என்ற அல்ஜீரியாப் பெண்ணின் கதையை கேளுங்கள். அரைக்கால் சட்டை அணிந்து ஓடக் கூடாது என்று தடை விதித்தார்கள் அல்ஜீரிய முல்லாக்கள். நிஜாமுதீன் அவர்களே! பர்தாவை போட்டுக் கொண்டா ஓட முடியும்? பர்தாவை வீசி எறிந்து விட்டு அந்த வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றார்.
6) பெண்கள் பர்தா அணியாததால்தான கற்பழிப்பு நடக்கிறது. ஆண்கள் இயல்பிலேயே காம வெறிர்கள். இறைவனின் படைப்பு அப்படி. இதற்கு ஆண்களை குற்றம் சொல்ல முடியாது. இஸ்லாம் கூறும் பர்தா மட்டுமே இதற்குத் தீர்வு — இன்னும் நிஜாமுத்தீன் எழுதியுள்ளவற்றையெல்லாம் படித்தால் சுயமரியாதையுள்ள எந்த இஸ்லாமியருக்கும் ஆத்திரம் வரும், பெண்களுக்கும் ரத்தம் கொதிக்கும். வங்காள தேச முஸ்லீம் பெண்களைப் பாக்கிஸ்தான் ராணுவம் கற்பழித்தது. பர்தா அணியாததால் தானோ! பர்தா அணியாத பெண்களைக் கற்பழித்த போலீசாரை குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்து விடலாமோ! முகலாய மன்னர்களுக்கும், துருக்கி சுல்தான்களுக்கும், இதர மன்னர்களுக்கும் ஆடுமாடுகளைப் போல் பெண்களைப் பிடித்து வந்து தம் அந்தபுரத்தில் நூற்றுக் கணக்கில் அடைத்து வைத்திருந்தனரே— பர்தாவைக் கண்டிருந்தால் அந்த மன்னர்கள் பயந்து ஓடியிருப்பார்களோ!
7) பர்தா வியாபாரத்தில் ஒரு இலவச இணைப்பும் தருகிறார் நிஜாமுத்தீன். நோய்க்கிருமிகளிடமிருந்தும், சுகாதாரக்கேட்டிலிருந்தும் பெண்களை பர்தா காக்கின்றது. அண்களும் அணிந்து அந்த பாதுகாப்பைத் தேடிக் கொள்ளலாமே!
8) இஸ்லாமிய மணவிலக்கு மறையில் உள்ள அநீதிகளை நாம் தனியே விளக்கத்தேவையில்லை. விவகாரத்து செய்யப்பட்டு ஜீவனாம்சமும் தரப்படாமல் சந்தியில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆயிரக்கனக்கான முஸ்லிம் பெண்கள் ஒவ்வொரு மாவட்ட நீதி மன்றத்திலும் போட்டிருக்கும் வழக்குகளே இதற்கு சான்று கூறும்.
9) அன்றைய முகலாய மன்னர்கள் முதல் இன்றைய அராபிய ஷேக்குகள் வரை அனைவரும் இஸ்லாம் கூறுவது போல நான்கு மனைவியுடன் நிறுத்திக் கெண்டார்களா? ஷரியத் என்றைக்காவது முழுமையாக அமலாகியிருக்கிறதா? ஏகபோகம், ஆடம்பரம், வட்டிக்கு விடுவதை எல்லாம் இஸ்லாம் தடை செய்கிறது என்கிறார் மவுதூதி. இப்படித்தான் கடைப்பிடிக்கப்படுகிறதா? உங்களுடைய வீரம் பெண்களிடம் தான் வாள் சுழற்றுமா?
10) சீரழிவைப் பரப்புவதில் மத வேறுபாடின்றிப் பங்காற்றும் இசுலாமிய நடிகர், நடிகைகளுக்கெதிராக எத்தனை ‘பத்வாக்கள்’ (ஆணைகள்)இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கின்றன?
11) இறைவன் அருளிய ; மாற்ற முடியாத ; சட்டங்களைப் பற்றி இன்று இவர்கள் பேசுகிறார்கள். எப்படி வாழ வேண்டுமானாலும் வாழ்ந்து கொள். ஆனால் வெளிப்படையாக எதிர்த்துப்பேசாதே! என்பதுதான் இவர்களை வழி நடத்தும் கோட்பாடு. தஸ்லீமா ஒழுக்கம் கெட்டவளாம். ஷாபானுவும் ஒழுக்கம் கெட்டவளோ? பெண் விடுதலை குறித்த தஹ்லீமாவின் கருத்துகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோமோ என்பது மதவெறியர்களுக்குத் தேவையில்லாத பிரச்சனை.
12) மதம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்டன தந்தை வழிச்சமுதாயமும், ஆண் ஆதிக்கமும். எனவே ஆணாதிகத்தின் சுவடுகள் ஒவ்வொரு மதத்திலும் இருந்தே தீரும். ஆணாதிகத்தை நிலை நிறுத்தும் பல்வேறு நிறுவனங்களில் மதமும் ஒன்று. மதங்கள் ஒழிந்து விட்டாலே ஆணாதிக்கமும் ஒழிந்து விடப் போவதில்லை. அதற்குத் தேவை சமுகப் புரட்சி. ஆனால் அணாதிக்கத்திற்குப் புனித முலாம் பூசும் மதக் கோட்பாடுகளைத் தாக்காமல் பெண் விடுதலை சாத்தியமில்லை.
13) போதும், தங்களது உழைப்பால் இந்த உலகத்தை உருவாக்கி வரும் கோடானு கோடி மக்கள் தங்களுக்கு உகந்த ஒழுக்க நெறிகளையும் தாங்களே உருவாக்கிக் கொள்வார்கள். அதற்கு எந்த மதகுருவின் உதவியும் ஆசியும் அவர்களுக்குத் தேவையில்லை. தான் வாழ்ந்த சமூகத்தின் பிரச்சினைகளுக்குறிய தீர்வுகளைத் தன் சொந்த பகுத்தறிவின் துணை கொண்டு ஆய்ந்து கண்டறிந்த ஒரு சிறந்த மனிதரின்–முகமது நபியின்–படைப்புதான் குர்ஆன். இருப்பினும் இன்றைய சமூகத்தின் பிரச்சினைகளுக்கும் கேள்விகளுக்கும் அதில் விடை தேட முடியாது.
அரசியல் கருத்தோட்டங்கள், நாங்கள் நடுநிலையாளர்கள் என்ற அவர்களின் சுய விளம்பரம் ஆகியவற்றை தவிர்த்து விட்டு மாற்று கருத்துள்ள விமர்சனங்கள் என்று பார்த்தால் மேற்கண்டவைகள் அதில் அடங்கியுள்ளன. இனி விமர்சனங்களுக்குள் செல்வோம்.

   விமர்சனம் – 1

சமஉரிமை என்பதே சல்லாபச்சொல்லாம். பெண்ணுக்கு சமஉரிமை தர வேண்டும் என்று பேசிய பெரியார் உள்ளிட்ட எல்லோரும் பொருக்கிகள் என்பதுதான் இதன் சாரம். வேறு வார்த்தைகளில் சொன்னால் பெண்ணுரிமை இயக்கத்தினரும், பர்தா அணியாத பெண்களும் வேசிகள். 
ஒருவர் தனக்கு தேவையான உரிமைகளைப் பற்றி சிந்திப்பது, அவற்றை அடையும் வழியில் முயற்சிப்பது எல்லாம் மனித உரிமைகளை சார்ந்த விஷயங்களாகும். இந்த உரிமைகள் மறுக்கப் படும்போது போராடிதான் அந்த உரிமைகளைப் பெற முடியும் என்ற நிலை வரும் போது போராடலாம். ஒத்தக் கருத்துல்லவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளலாம். இதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தன் உரிமையை பிறருடைய உரிமையோடு ஒப்பிட்டு ‘அது போன்று வேண்டும்’ என்று வாதிக்கும் போதுதான் பிரச்சனைகள் முளைக்கின்றன.
ஒரு நிறுவனத்தில் ஆண்களும் பெண்களும் வேலை செய்கிறார்கள். ஆண் தன்னுடைய தேவைக்காக விடுப்பு எடுக்கிறான். அல்லது தேவை இல்லாமலேயே விடுப்பு எடுக்கிறான். அதே போன்று சக ஊழியப் பெண் தன் தேவைக்காக – தேவை இல்லாமல் கூட விடுப்பு எடுக்கலாம். அவருக்கு விடுப்பு கொடுத்ததால் எனக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்கக் கூடாது. விடுப்பு என்பது, ஓய்வு – உரிமை – சார்ந்த விஷயமாக கருதப்பட்டால் அதை அவள் தன்னுரிமை என்ற அடிப்படையில் பெறலாம். அவருக்கு கொடுப்பதால் எனக்கும் வேண்டும் என்று எவர் பின்னாலாவது ஒளிந்துக் கொண்டு குரல் கொடுத்தால் இது உரிமைக் குரல் அல்ல. பிறரை வம்புக்கு இழுக்கும் திட்டமாகும். ஆணை விட பெண்ணை குறைத்து மதிப்பிடக் கூடாது விடுப்பு உட்பட சம அளவில் கொடுக்கப்படும் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றெல்லாம் போராடுவது பெண் உரிமைக்கு உள்ள அடையாளமல்ல.
பிரசவக் காலங்களில் ஒரு பெண் அதிகப்படியான விடுப்பு எடுப்பாள். இந்த விடுப்பு ஆண்கள் எடுக்கும் விடுப்பை விட அதிகமானதாகும். இதை காரணம் காட்டி ஆண்களும் அதே அளவு விடுப்பு கேட்பது அறிவுடமையாகாது. அப்படி கேட்டால் எந்த நிர்வாகமும் அதை ஏற்றுக் கொள்ளாது. பிரசவக் கால விடுப்பு என்பது ஆணுக்கு தேவையில்லாததாகும். இதிலிருந்து இயல்புக்கு ஏற்றவாறு சட்டங்கள் மாறுபடத்தான் செய்யும் என்பதை விளங்கலாம்.
ஆலைகளில், தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் கூட ஆண்கள் வேலை செய்வார்கள். பெண்கள் இரவில் வேலை செய்யக் கூடாது என்று அரசு சட்டம் பிறப்பிக்கிறது. உடனே தங்கள் உரிமை பறிப்போய் விட்டது என்று பெண்கள் கூச்சல் போடக் கூடாது. இரவு நேரங்களில் வேலை செய்வது பெண்களின் இயல்புக்கு மாற்றமான அவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை மேலும்  அதிகப்படுத்தி விடும் என்று அரசு கருதுவதால் இந்த வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. ஆண்கள் இரவிலும் வேலை செய்வதால் நாங்களும் செய்யத்தான் வேண்டும் இது எங்கள் உரிமை பிரச்சனை என்று எந்த பெண்ணாவது வாதிட்டால் அவள் பெண்ணைப் பற்றி சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்பது தான் பொருள். இரவில் கூட பாதுகாப்பாக வேலை செய்ய முடியும் என்று பெண்கள் கருதி அதற்காக போராடினால் கூட ‘ஆண் இரவில் வேலை செய்வதால் நானும் செய்வேன்’ என்று உரிமையை சமமாக்கிக் கொள்ளக் கூடாது. அது தேவையுமல்ல. ‘என்னால் முடியும் நான் செய்வேன்’  என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதான்.
தன்னுடைய ஆண் வளர்ந்த ஆண் குழந்தைக்கு தந்தை உடை எடுக்கிறார். உடனே அவரது மகள் ‘ஆண் – பெண்ணுக்கு  மத்தியில் வித்தியாசம் காட்டுவது பெண்ணுரிமைக்கு எதிரானது அதனால் அவருக்கு எடுத்தது போன்ற உடையே எனக்கும் வேண்டும்’ என்று கேட்டால் தன் மகள் அறிவுப்பூர்வமாக பேசுகிறாள் என்று அந்த தந்தை பாராட்ட மாட்டார்.
இதையெல்லாம் நாம் கூறுவதற்கு காரணம் ‘சம உரிமை’ என்ற வார்த்தை – விபரீதங்களின் அடையாளத்தையும், நடைமுறை சாத்தியமற்றதையுமே காட்டும் என்பதற்காகத்தான்.
பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று கேட்காமல் ஆண்களைப் போன்று பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று பெரியார் கேட்டிருந்தால் – அவ்வாறு கேட்டிருந்தால்தான் – அது அவரது பழுத்த அறிவுக்கு உகந்ததாக இருக்க முடியாது. 
எந்த மாதர் சங்கமும் சம உரிமை வேண்டும் என்று கேட்பதில்லை. பெண்களுக்குரிய உரிமை வேண்டும் என்று தான் கேட்கிறார்கள். ஆண்களோடு போட்டிப் போடும் மனோ பாவத்தை விட்டு விட்டு பெண் தன் நிலையிலிருந்து தன்னை உயர்த்திக் கொள்ள பாடுபட வேண்டும் என்பது தான் பரவலாக மாதர் சங்கங்களின் கோரிக்கையாக இருக்கிறது (மாதர் சங்கங்கள் என்ற பெயரில் வேறு சிலப் பெண்கள் வேறுவிதமாக சிந்திக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்) இதை நாம் மறுக்கவில்லை. சிந்திக்கத் தெரிந்த எந்த முஸ்லிமும் மறுக்க மாட்டான். உரிமையை தீர்மானிக்கும் விஷயத்தில் சில கருத்து வேறுபாடுகள் உருவாகலாமேத் தவிர உரிமைப் பேச்சே கூடாது என்று எந்த முஸ்லிமும் சொல்ல மாட்டான்.
உலகில் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இனமாக பெண்ணினம் இருப்பதை நடு நிலையாளர்கள் யாரும் மறுக்க மாட்டார்கள். அவர்களுக்குரிய இயல்பான உரிமைகள் கூட கிடைப்பதில்லை என்பதை நாமும் பகிரங்கமாக அறிவிப்போம். அவர்களின் உரிமை அவர்களுக்கு கிடைக்கப் போராடுவோம், போராடிக் கொண்டு இருக்கிறோம். பிரச்சனை பெண் உரிமைக்காக போராடுவதிலில்லை. பெண் உரிமையையும் ஆண் உரிமையையும் போட்டு குழப்பிக் கொள்வதில் தான் இருக்கிறது.
எனவே பெண்களுக்காக பாடுபடும் எவரும் நடைமுறை சாத்தியமில்லாத சம உரிமை என்ற சித்தாந்தத்தை ஒதுக்கி விட்டு பெண்களின் இயல்புக்குரிய ‘பெண்ணுரிமை’ பற்றி பேசட்டும். போராடட்டும். அவர்களின் இயல்புக்குரிய உரிமைகளே சரியாக வழங்கப்பட வில்லை. அதற்கே பெரும் போராட்டத்தை மேற் கொள்ள வேண்டி இருக்கும் போது எல்லைக் கடந்து ஆணுடைய உரிமைகளைப் போன்று வேண்டும் என்று மல்லுக்கட்டிக் கொண்டு நிற்பது இயல்பாக கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கூட காலம் கடத்தி விடும் என்பதை நம்மை விமர்சிப்போர் உணர வேண்டும். 
கல்வி, பொருளாதாரம், குடும்பம், முன்னேற்றம் பற்றியெல்லாம் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதற்குரிய சூழலை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.
பெண் கல்வி – பெண் பொருளாதாரம் – பெண் முன்னேற்றம் – குடும்பமும் பெண்ணும் என்றெல்லாம் கூறுவதில் எத்தகைய உரிமை பறிபோகுதலும் கிடையாது.
பெண்ணுரிமை என்ற வார்த்தை பிற்போக்கானது சம உரிமை என்ற வார்த்தை தான் சரியானது என்று இந்த முற்போக்கு வாதிகள் வாதிட்டால் – அவர்கள் தங்கள் நிலையை சந்தேகத்திற்கிடமின்றி வெளிபடுத்தி விட வேண்டும். ஆண் மிக குறைந்த உடையுடன் வெளி உலகை சுற்றி வந்து விடுவான். கீழாடையை மட்டும் போதுமாக்கிக் கொண்டு எந்த வேலையையும் செய்து விடுவான். எல்லா காரியத்திலும் ஆண்களுடன் போட்டிப்போடும் மன நிiலையை பெண்களுக்கு உருவாக்க வேண்டும் என்று எவராவது வாதிட்டால் ‘ உடையணிவதிலும் அவர்கள் எங்களோடு போட்டிப் போடட்டும்’ என்று ஆண்கள் வாதிடலாம். அவ்வாறு வாதிடுவது தவறு என்று சொல்ல முடியாது. சொல்லக் கூடாது. உரிமை என்ற பெயரில் மேலை நாடுகளில் பெண்களின் மேலாடை கழற்றப்பட்டுக் கொண்டிருப்பதை இவர்கள் மறந்து விடக் கூடாது.
எல்லாம் சமம், எதிலும் சமம் என்பது சில நேரங்களில் பெண்களுக்கு பெரும் கேட்டை விளைவித்து விடும் என்பதால் சம உரிமை என்பது பெண்ணுரிமைக்கு எதிரான சல்லாப வார்த்தைதான். இதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை.
தொடர்வோம்.

ஒரு பதில் to “இறைவனின் அடியாட்கள்!”

  1. abdul azeez said

    ஹலோ, ஆடு நனையுதே என்று ஓநாய் கவலைப்பட்டதாம் உங்கள் வீட்டு பெண்களை வேண்டும் என்றால் அல்லாத்தையும் அவிழ்ல்து எறிந்துவிட்டு வைரபதக்கம் வாங்கி நீங்கள் வணங்குபவர் பக்கத்தில் வைத்து பூஜை seiyungal

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: