தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

யுத்தம் நோக்கி… (சிறுகதை)

Posted by tamilmuslim மேல் மார்ச் 28, 2008

யுத்தம் நோக்கி… (சிறுகதை) 

ஜுனியன்.

………………………………………………………………………..

‘எண்ணங்களே வாழ்க்கையாகும் உன் முயற்சிக்கு இறைவன் துணை இருப்பான் தம்பியை கூட்டிக்.கொண்டு போ..’

 ‘சரித்தா’என்று தந்தைக்கு பதில் சொல்லிக் கொண்டே வலிதா புர்காவினுல் புகுந்தாள். கை பேக்கை திறந்து செக் பண்ணிக் கொண்டாள். ‘வா பாரூக் நேரமாயிடுச்சு..’ என்று சொல்லிக்கொண்டே ஓடி செருப்பை மாட்டினாள். அம்மாவிடம் சொல்லாதது ஞாபகத்திற்கு வந்தது. செருப்பை கழற்றி விட்டு அடுப்பங்கரைக்கு போனாள்.

  ‘அம்மா. நா போய்ட்டு வரேன்..’

 அம்மாவால் தலையாட்ட முடிந்ததே தவிர பேசமுடியவில்லை. வலிதாவின் அம்மா கிராமத்தில் வளர்ந்தப் பெண். அவ்வளவாக படிப்பறிவு இல்லாத சூழலில் இருக்கமான சமூக கட்டுப்பாட்டுடன் வளர்ந்தவள். மகளின் வெளி உலக தொடர்பு அவளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதற்கு நேர் மாற்றமாக இருந்தார் உமர். ‘சமூக மாற்றம் என்பது ஆண்களால் மட்டும் ஏற்படக் கூடியதல்ல அதற்கு பெண்களும் பெரும் பங்கு வகுக்க வேண்டும்’ என்பதில் ஆழ்ந்த அக்கரையுள்ளவர். வலிதாவிற்கு முன் இரண்டு பெண் குழந்தைகள் இறந்துப் போனாலும் வலிதாவை வீட்டுக்குள் அடைத்து வைக்க அவர் விரும்பவில்லை. அவளுக்கு சில வருடங்களுக்குப் பிறகே பாரூக் பிறந்தான்.

 எழில் திருமண மண்டபத்திற்கு ஆட்டோ நின்றது. கூட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும் வெளியில் யாரையும் காணவில்லை. வலிதா பரபரப்பாக இறங்கினாள். பாரூக் அவள் பின்னால் ஓடினான். கதவை திறந்தாள். பேராசிரியர் இளம் பிரியன் தலைமையுரையாற்றுவது தெரிந்தது. பாரூக்கை கீழ் வரிசையில் உட்கார சொல்லிவிட்டு மேடையில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். கையில் பேப்பர் பேனாவுடன் கவனம் பேராசிரியரின் உரையில் நின்றது.

 ‘மூன்று இளம் மாணவர்கள் இச் சமூக கொடுமைகளை அதன் தீமைகளை தோலுரிக்க வந்துள்ளார்கள் எனவே என்னுரையை முடித்து அவர்களுக்கு வழி விடுகிறேன்.’ கூட்டம் கை தட்டிற்று. இளம்பிரியனின் உரையை கேட்க முடியாததில் வருத்தம்தான். எங்கு தன் மீது கோபப்படுவாரோ என்ற அச்சம் கூட தொத்தி நின்றது வலிதாவிற்கு.
  ‘செல்லறிக்கும் சமூக கொடுமைகள்’ என்ற தலைப்பில் இங்கு ஆய்வரங்கம் நடத்துகிறோம். வளர்ந்து வரும் நாடு என்று பெயர் பெற்ற நம் நாட்டில் மக்களை வெகுவாக கவரும் சில துறைகளின் வளர்ச்சியை மட்டும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அனைத்து மக்களிடமும் கொண்டு போகும் நாம் அவற்றிர்க்கு சற்றும் குறையாத வகையில் நடந்து வரும் கொடுமைகளை பெரிது படுத்தாமல் இருக்கிறோம்.பெண்களுக்கு எதிரான கொடுமைகளை அரசு கவனத்திற்கு கொண்டு போகும் நோக்கோடு இவ்வாய்வரங்கம் நடக்கிறது. சகோதரி வலிதா முஸ்லிம் சமூகத்தை சார்ந்த பெண். எது நடந்தாலும் அதை பெரிது படுத்தாமல் தாம் உண்டு தம் வேலையுண்டு என்றிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து மிகுந்த எழுச்சீயுடன் வெளிபட்டுள்ளார்.’

 கூட்டத்தின் கைதட்டல் அரங்கை அதிர வைத்தது. வலிதாவின் சிந்தனை உள்ளக் குமுறலுடன் பின் நோக்கி ஓடியது. எட்டாம் படிக்க துவங்கியதிலிருந்தே இந்திய பெண்ணிணத்தை ஆழ்ந்து நோக்க துவங்கினாள். பெண் சிசுக் கொலை,வரதட்சனை சாவு புகுந்த வீட்டுக் கொடுமை என்று செய்தி வரும் போதெல்லாம் உள்ளக்குமுறலுடன் கண்ணீர் வடியும். அப்போதிலிருந்தே  பெண்ணிணத்திற்காக பாடுபடும் இலட்சியம் அழுத்தம் பெற்றது. ஆண்டுகள் பல உருண்டோடி பல சங்கங்களில் பொறுப்பு வகித்து பல பத்திரிக்கைகளில் எழுதி வலிதாவின் குரல் ஆங்காங்கே ஒலிக்க துவங்கிய போது எதிரிகள் முளைத்தனர் ஆண்வர்கத்திலிருந்து. ஆரம்ப காலங்களில் ராகிங் கோஷங்கள் கிண்டல்கள் தூரத்திலிருந்து கல்லெரிதல் கூட நடந்தது. தனக்கெதிரான சம்பவங்களை அலட்சியப்படுத்தி செய்பவர்களுக்காக பரிதாபப்பட்டாள். நேற்றுக்கூட அது நடந்தது அவள் வீட்டில்..

 டெலிபோன் அலறியது உமர் தான் ரிஸிவரை எடுத்தார்.
  ‘யார் பேசறது..’

  ‘உங்க மகளோட பேசனும் கொடுக்க முடியுமா..’

 ‘அவ முக்கிய வேலையா வெளிய போயிருக்கா, நீங்க யார்ன்’னு சொன்னா அவ வந்த பிறகு சொல்றேன்.’

 ‘பாய்,உங்க மக ரொம்ப அதிகமா பேசறா..நாளைக்கு கூட பேசப் போறா’ன்னு கேள்விபட்டோம், நீங்க அவள அடக்கி வைக்கலேன்னா தீத்துடுவோம். ஏதிர் முனையில் குரல் உயர்ந்தது. உமர் அமைதியாக தெலிபோனை ‘கட்’பண்ணிவிட்டு எதிரில் உட்கார்ந்திருந்த மகளைப் பார்த்தார்.

 ‘வலிதா உனக்கு வயது இருபத்தி ரெண்டு ஆகுது அடுத்த வருடமாவது உன் திருமணத்தை முடிச்சுடலாம்’ன்னு நெனக்கிறேன்’

‘தெலிபோன்’ல யாரு.. எதுக்கு நா இங்கிருக்கும் போது இல்லே’ன்னு சொன்னீங்க. இப்போ பேச்ச மாத்தி பேசறீங்க..’

‘அது வழக்கமான மிரட்டல்மா..அத பத்தி நான் கவலப்படல, சமூகம் சம்பந்தமான உன் சிந்தனையும் செயல்பாடும் இல்லறம் குடும்பம் பற்றிய உன் நினைவுகல குறைச்சிடுமோ’ன்னு பயமா இருக்குமா..’

கூட்டம் கை தட்டிற்று. வலிதா உணர்விற்கு வந்தாள். அன்பன் தன் உரையை முடித்திருந்தான்.அவனது உரையையும் கவனிக்கவில்லை.

‘அக்கா..நல்லா பேசினேனா..’

சிரித்துக் கொண்டாள்.

கூட்டம் அதிகப் பட்டிருந்தது. எல்லோர் முகத்திலும் அடுத்த உரைக்கான எதிர்பார்ப்பு இருந்தது. இளம் பிரியன் எழுந்து ‘தம்பி அன்பனை தொடர்ந்து சகோதரி வலிதா ‘மிதிபடும் பவுர்ணமிகள்’ என்ற தலைப்பில் பெண்களுக்கு எதிரான அவலங்களை விவாதிக்கப் போகிறார், அவரை அழைக்கிறோம்’ என்று கூறி விட்டு அமர்ந்தார். வுலிதா எழுந்து மைக் முன்னால் வந்து நின்றாள் முகம் மட்டும் திறந்து உடல் முழுவதையும் மூடி இருந்தது அவளது கருப்பு புர்கா. ‘இவளுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும்..’தனக்குள் கர்ஜித்துக் கொண்டது உமரிடம் தெலிபோனில் மிரட்டியக் குரல்.

வலிதா கூட்டத்தை நோட்டமிட்டாள் மண்டபம் நிறைந்திருந்தது. பெண்கள் பகுதியிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. பலதரப்பட்ட வயதினர்களும் வந்திருந்தனர். தன் உரையை துவங்கினாள்.
 ‘வணங்க தகுதிபெற்ற ஒரே இறைவனால் படைக்கப்பட்டுள்ள  சகோதர, சகோதரிகளே! உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவட்டுமாக..’

 ‘போராட்டமே வாழ்க்கையாகிப் போன என் இனத்தைப் பற்றி… பெண்ணினத்தைப் பற்றி, அதையே விவாதப் பொருளாக்கி ‘மிதிபடும் பவுர்ணமிகள’ என்ற தலைப்பை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.

பெண்களுக்காக குரல் கொடுக்கும் சங்கங்களின் பிரதிநிதியாக வந்து நான் இங்கு உரையாற்றவில்லை. மிதிபடும் பவுர்ணமிகளில் ஒருத்தியாகவே உங்கள் முன் நின்று விவாதிக்கப் போகிறேன். அப்போதுதான் அதன் ஆழத்தை என்னால் வலுவாக விளக்க முடியும்.. எனக்கு இன்னும் திருமணமாகவில்லை மாமியார் வீடு பற்றி அங்குள்ள சாதக பாதக சூழ்நிலைப்பற்றி நான் இன்னும் அனுபவம் பெற வில்லை. என் வீட்டில் பெண்களுக்கு எதிரான எந்த கொடுமையும் நடக்கவில்லை. முரட்டுக் கட்டுப்பாட்டுடன் நான் இருட்டில் வளர்க்கப்படவில்லை. ஆனாலும் இவை அனைத்தையும் அனுபவித்தது போன்று ஒரு மனநிலையை உணர்கிறேன். அந்த அளவிற்கு பெண்களுக்கு எதிரான சிந்தனைப் போக்கு என் இனத்தை சுற்றி நிலவுகிறது.’

 கூட்டம் நிசப்தத்தில் மூழ்கியிருந்தது.

 ‘பெண்களுக்கு எதிரான சிந்தனைக் கொண்ட ஆண்களிடம் கேட்கிறேன் உங்களால் எப்படி முடிகிறது பெண்களுக்கு எதிராக செயல்பட,! அவள் ஆன்மாவும் இதயமும் ஆசா பாசங்களும் சுய விருப்பு வெறுப்புமற்ற ஏதோ ஒரு ஜந்து என்று நினைத்துக் கொண்டீர்களா.. வெறும் சதையால் போர்த்தப்பட்ட உயிருள்ள பொம்மையா அவள். உங்களில் பாதியாக உங்களுடன் காலாகாலமாக இணைந்து நாம் வாழவில்லையா.. உங்கள் சுக துக்கங்களில் விருப்பு வெறுப்புக்களில் பங்கெடுக்கவில்லையா.. நீங்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். சராசரியாக குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன பிரச்சனை முதல் பெரும் பிரச்சனை வரை தனக்கு பாதகமாக இருந்தாலும் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து போவது பெண்கள் தான். மனைவி கோபப்பட்டால் அதனால் எந்த பாதிப்பும் கணவனுக்கு இல்லை ஆனால் கணவன் கோபபட்டால் அதன் விளைவுகளை மனைவி என்ற பெண் சந்திக்க வேண்டும்.. திருமணம் என்ற ஒப்பந்தம் கணவனுடன் நடந்தாலும் கணவன் வீட்டார் எல்லோருக்கும் அவள் வேலை செய்ய வேண்டும். மனைவியாக கணவனை அரவணைக்கிறாள், தாயாக குழந்தையை அரவணைக்கிறாள், குடும்ப பெண்ணாக பக்குவப்பட்டு குடும்ப உறுப்பினர் அனைவரையும் அரவணைக்கிறாள். ஆண்களே நீங்கள் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் இந்த தியாகத்திற்கு நீங்கள் காட்டும் பிரதிபலன் என்ன.. வயிற்றுக்கு சோறும் உடுத்த துணியும் தான் இதற்குறிய பிரதிபலனா..’

 பெண்கள் புறத்திலிருந்து விசும்பல் சத்தம் கேட்டது.
 
 ‘மனைவி என்பவள் படுக்கைக்கு மட்டும் உரியவள் என்ற சிந்தனையை அல்லது எவரோ வகுத்துவைத்துள்ள ஐதீகத்தை புறக்கணித்து அவளை உங்களது சக தோழியாக தேர்ந்தெடுங்கள். உங்களது பிரச்சனைகளில் அவளின் சிந்தனையும் பங்குபெற வாய்ப்பளித்துப் பாருங்கள். வாழ்க்கை என்பது இரண்டு உடல்கள் சார்ந்தது என்ற மட்டமான சிந்தனையை தூர எரிந்து அது இரண்டு உள்ளங்களின், இரண்டு ஆத்மாக்களின் சங்கமம் என்ற உண்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். திருமணமான ஆண் தோழர்களே! நான் ஒன்று சொல்லட்டுமா.. உங்கள் ஒவ்வொருவருடனும் ஒரு பெண் வாழ்கிறாள் மனைவி என்ற அடை மொழியுடன். நீங்கள் சிரித்தால் அவள் சிரிப்பாள். நீங்கள் அழுதால் அவள் அழுவாள் உங்கள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் அவள் தனக்குரியதாக ஏற்றுக் கொள்வாள். உண்டு உங்கள் வயிறு நிறைந்தால் அதை பார்த்து உண்ணாமலேயே அவள் வயிறு நிறையும் தெரியுமா உங்களுக்கு.

 விசும்பிய பெண் அழ துவங்கிவிட்டாள் யாரோ கைத்தாங்களாக அவளை வெளியில் கூட்டிச் சென்றார்கள்.

 தன் கணவன் தனக்கு தன் கருத்துக்குச் செவி சாய்க்க வேண்டும் அவனில் நானும் ஒருத்தி என்பதை அவன் உணர வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் எதிர் பார்க்கிறாள் ஆனாலும் அதை பகிரங்கமாக தன் கணவனிடம் சொல்ல முடிவதில்லை. இதற்குக் காரணம் ஆண்களிடம் உள்ள தான் என்ற மனநிலை. எல்லா ஆண்களையும் இந்த குற்றச்சாட்டில் நான் இணைப்பதாக கருத வேண்டாம். தன் மனைவியை தோழியாக நினைத்து எல்லாவற்றிலும் அவர்களோடு ஐக்கியமாகும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த குடும்பங்களின் மகிழ்ச்சி அலாதியானது.|

‘செல்லரிக்கும் சமூக கொடுமைகள்’ என்ற தலைப்பில் இங்கு பலர் விவாதித்தனர் சமூகத்தில் நடக்கும் எவ்வளவோ கொடுமைகளை அவர்கள் இனம் காட்டினார்கள். பொதுவாகவே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்று அவள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவதை தான் நாம் நினைத்துக் கொள்கிறோம். ஒரு பெண்ணின் உடல் காயப்பபடுவது மட்டும் கொடுமையில்லை. உணர்வு ரீதியாக அவள் பறக்கணிக்கப் படுவதும் கொடுமைதான். இது மனநோயை ஏற்படுத்தக் கூடிய கொடுமையாகும். ஆதனால்தான் என் உரையின் முதல் கட்டமாக குடும்ப ஆண்களைப் பற்றி எடுத்துக் கொண்டேன்.

 கூட்டத்தில் கை தட்டல் அதிர வைத்தது. பேராசிரியர் இளம் பிரியன் ஆச்சர்யத்தோடு வலிதாவை பார்த்தார். (வரும்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: