தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

ஜாதிய வெறி கிறிஸ்த்தவத்தில்!

Posted by tamilmuslim மேல் மே 10, 2008

இந்தியாவில் கிறித்துவ மதத்திலும் சாதிய தீண்டாமைக் கொடுமைகள் நீடித்திருப்பதை எறையூரில் வன்னிய கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மீது நடத்திய வெறியாட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள எறையூரில் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த ஜெபமாலை அன்னை தேவாலயம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வன்னிய கிறித்தவர்கள் பெரும்பான்மையாகவும்; தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் சிறுபான்மையாகவும் உள்ளனர். சாதிதீண்டாமையைக் கோட்பாட்டளவில் கிறித்துவ மதம் ஏற்காத போதிலும், இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மீது வன்னிய கிறித்தவர்களின் ஆதிக்கமும் அடக்குமுறையும் நீண்டகாலமாகப் பங்குத் தந்தையின் ஆசியோடு நீடித்து வருகிறது.

தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்குத் தனிக் கல்லறை, தனிசவஊர்தி (தூம்பா), தேவாலயத்தின் பொதுவழியைப் பயன்படுத்த அனுமதி மறுப்பு, ஆலயத்திற்குள் நுழையவிடாமல் தடை, ஊர்ப் பஞ்சாயத்து என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிப்பது, சாதிவெறியோடு தாழ்த்தப்பட்டோரைக் கிண்டல்கேலி செய்து அவமதிப்பது என வன்னிய கிறித்தவர்களின் சாதிவெறிக் கொட்டம் கேள்விமுறையின்றித் தொடர்ந்து வருகிறது.

கடந்த 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் நாளன்று, முகையூரில் பாதிரியாராக இருந்த எறையூரைச் சேர்ந்த தலித் கிறித்தவரான ஃபாதர் இருதயநாதனின் தாயாரது இறுதி ஊர்வலத்தைத் தேவாலயத்தின் பொதுவழியாகச் செல்லத் தடைவிதித்து, ஆயுதங்கள் வெடிகுண்டுகளுடன் சாலையை மறித்து வன்னிய கிறித்தவ சாதிவெறியர்கள் எச்சரிக்கை விடுத்தனர். புதுச்சேரி கடலூர் மறை மாவட்டப் பேராயர் வந்து கெஞ்சியும் கூட இச்சாதிவெறியர்கள் அசைந்து கொடுக்கவில்லை. வேறு வழியின்றி ஃபாதர் இருதயநாதன் தாழ்த்தப்பட்டோருக்கென விதிக்கப்பட்ட குறுகிய சந்தின் வழியாகத் தனது தாயாரின் உடலை எடுத்துச் சென்று, தலித்துகளுக்கான தனிக் கல்லறையில் அடக்கம் செய்தார். பாதிரியாருக்கே இந்தக் கதி என்றால், சாமானிய தலித் கிறித்தவர்களின் மீதான வன்னிய கிறித்தவ சாதிவெறியர்களின் அடக்குமுறை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

எறையூரில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த திருவிழாவின் போது தேவாலயத்திற்கு வழிபடச் சென்ற தாழ்த்தப்பட்ட கிறித்தவப் பெண்களை செல்போனில் படம் பிடித்த வன்னிய கிறித்தவ இளைஞர்களைத் தட்டி கேட்டதற்காக வன்னிய சாதிவெறியர்கள் அடிதடி கைகலப்பில் இறங்கினர். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் தீண்டாமை வழக்கின் கீழ் புகார் கொடுத்ததும், மளிகைக் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்குப் பலசரக்குகளைக் கொடுக்கக் கூடாது, ஓட்டல்களில் சாப்பாடு கொடுக்கக் கூடாது என்று தடைவிதித்தனர். இந்த அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் கண்டு குமுறிய தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள், தங்களுக்கென தனியாக சகாயமேரி மாதா ஆலயம் என்ற பெயரில் தனி தேவாலயத்தை கடந்த டிசம்பரில் கட்டியமைத்துக் கொண்டனர். இத்தேவாலயத்திற்கு புதுச்சேரிகடலூர் மறை மாவட்ட அங்கீகாரத்தையும் தனி பாதிரியாரையும் கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால், சாதி அடிப்படையிலான தனி தேவாலயத்தை அனுமதிக்க முடியாது என்று நிராகரித்தது கிறித்தவ பேராயம்.

தாங்கள் கட்டிய தேவாலயமும் முழுமையடையாமல், ஜெபமாலை அன்னை தேவாலயத்திலும் வழிபட முடியாமல் தத்தளித்த தாழ்த்தப்பட்ட மக்கள், கடந்த மார்ச் முதல் வாரத்தில் “”சாதிப் பாகுபாட்டை நீக்கு; இல்லாவிட்டால் சாதிப் பாகுபாடு காட்டும் தேவாலயத்தைப் பூட்டு” என்று முழக்கத்துடன் சுவரொட்டிகளை ஒட்டி, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். ஆனாலும் உள்ளூர் தேவாலயப் பாதிரியாரோ, மாவட்ட முதன்மை குருவோ, பேராயரோ, மூன்றாவது நாள் உண்ணாவிரதத்தில் சிலர் மயங்கி விழுந்த பின்னரும் எட்டிக் கூடப் பார்க்காமல் அலட்சியப்படுத்தினர்.

மதகுருபீடமே தாழ்த்தப்பட்டோரை அலட்சியப்படுத்திப் புறக்கணிப்பதைக் கண்ட வன்னிய சாதிவெறியர்கள் சும்மா இருப்பார்களா? “”தேவாலயத்தைப் பூட்டுவோம்னு போஸ்டராடா ஒட்டுறீங்க?” என்று அரிவாள், தடிகளோடு மார்ச் 9ஆம் தேதியன்று நூற்றுக்கணக்கில் திரண்ட சாதிவெறியர்கள், தாழ்த்தப்பட்டோரை மிருகத்தனமாகத் தாக்கி அவர்களது வீடுகளை இடித்து நாசப்படுத்தி, அற்ப உடைமைகளைச் சூறையாடி வெறியாட்டம் போட்டனர். தேவாலய விவகாரத்தையொட்டி பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த போலீசாரையும் இச்சாதிவெறியர்கள் தாக்கியதால் ஆத்திரமடைந்த போலீசு கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரைக் கொன்று பலரைப் படுகாயப்படுத்தியது.

இத்துப்பாக்கிச் சூட்டில் இறந்த இரு வன்னிய கிறித்தவர்களின் உயிருக்குப் பழிக்குப் பழியாக இருபது தலித்துகளைக் கொன்று பதிலடி கொடுப்போம் என்று வெளிப்படையாக ஆதிக்க சாதியினர் அச்சுறுத்தி வருகின்றனர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.எஸ்.ஆசீர்வாதம் (தி.மு.க), இந்நாள் தலைவர் எம்.சி. ஆரோக்கியதாஸ் (அ.தி.மு.க.) மற்றும் பாதிரியார் இலியாஸ் ஆகிய மூவரும் கூட்டணி சேர்ந்து கொண்டு வன்னிய சாதிவெறியர்களை வழிநடத்துகின்றனர். இம்மூவர் கூட்டணியோ, வன்னிய சாதி வெறியர்களோ இன்றுவரை கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் பாயவில்லை.

பானை சோற்றைப் பதம் பார்த்தாற்போல, தமிழகமெங்கும் பல தேவாலயங்களில் நிலவும் சாதிப்பாகுபாடு தீண்டாமைக்கு எறையூர் ஓர் உதாரணம். பல பகுதிகளில் தாழ்த்தப்பட்டோருக்குத் தனிக் கல்லறை, வழிபாட்டு உரிமை மறுப்பு, தாழ்த்தப்பட்ட பாதிரியாரை அவமதித்தல் எனத் தீண்டாமைக் கொடுமைகள் பரவலாக தொடர்ந்து நீடிக்கின்றன. கிறித்தவ மதம் இந்தியாவில் நுழையும் போதே, பார்ப்பன இந்து மதத்தின் சாதியதீண்டாமைகளோடு சமரசம் செய்து கொண்டுதான் படிப்படியாகக் காலூன்றியது. இன்று அது ஆதிக்க சாதியினருடன் கூட்டுச் சேர்ந்து தாழ்த்தப்பட்டோரை ஒடுக்குமளவுக்கு மாறிவிட்டது.

இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பெயரளவிலாவது சட்டப் பாதுகாப்பு உள்ளது. ஆனால், கிறித்தவ மதத்தில் அதுகூடக் கிடைப்பதில்லை. மதச் சிறுபான்மையினர் விவகாரம் என்பதால், தொடரும் இச்சாதிவெறித் திமிரையும் தீண்டாமைக் கொடுமையையும் தமிழக அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. சாதிப் பாகுபாட்டை ஒழிக்கச் சட்டரீதியாக நெருக்கடி கொடுக்கக் கூட அது தயங்குகிறது.

இருப்பினும், விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் தமது செல்வாக்குள்ள பகுதிகளில் தாழ்த்தப்பட்ட பாதிரியார்களும் கிறித்தவ தன்னார்வக் குழுக்களும் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களை அணிதிரட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் துணையுடன் ஈஸ்டர் பண்டிகையைப் புறக்கணிக்கும் போராட்டத்தை அறிவித்து, 21 தேவாலயங்களைப் பூட்டி கருப்புக் கொடியேற்றும் போராட்டத்தை கடந்த மார்ச் 16 அன்று நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, இப்பாதிரியார்களும் தன்னார்வக் குழுக்களும் தாழ்த்தப்பட்டோரைத் திரட்டி வந்து திருமாவளவன் தலைமையில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஈஸ்டர் பண்டிகை நேரத்தில் இவ்வளவு தேவாயலங்களிலும் வழிபாடு நடக்காததை வைத்துப் பேராயரின் பதவியே பறிக்கப்பட்டு விடும் என்பதால், அரண்டு போன கடலூர்புதுவை மறைமாவட்டப் பேராயரான ஆனந்தராயர், “”இனி சாதிப் பாகுபாடே இருக்காது; அனைவரும் தேவாலயத்தில் வழிபடலாம்” என்று வாக்குறுதி அளித்துள்ளார். சாதிவெறியர்களுடன் கூடிக் குலாவிக் கொண்டு இதை எப்படிச் செயல்படுத்த முடியும் என்பது அவருக்கே வெளிச்சம்.

மறுபுறம், எறையூர் வன்னிய கிறித்தவர்களோ பேராயரின் முடிவை ஏற்க மறுத்து, தங்களுக்கும், தலித்துகளுக்கும் தனித்தனியே பங்கு கொடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் மதம் மாறப் போவதாகவும் கொக்கரிக்கின்றனர். அவர்களது சாதிய அடக்குமுறையை அங்கீகரிக்கும் இந்து மதத்துக்கு அவர்கள் மாறினாலும், சொத்துரிமை வாக்குரிமையையோ, இடஒதுக்கீட்டு சலுகைகள் பதவிகளையோ அவர்கள் இழக்கப் போவதில்லை. இதனாலேயே இன்னமும் சாதியத் திமிரோடு அவர்ளால் மிரட்டி எச்சரிக்கை விடுக்க முடிகிறது.

இந்நிலையில் இச்சாதிவெறியர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் வாக்குரிமை ஜனநாயக உரிமை, இடஒதுக்கீடு உரிமை உள்ளிட்டு அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் ரத்து செய்யக்கோரி போராட்டங்களைத் தொடர வேண்டும். எறையூர் மற்றும் கடலூர் விழுப்புரம் மாவட்டத் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் தொடங்கியுள்ள தீண்டாமைக்கெதிரான இப்போராட்டத்தை ஆதரித்து, அனைத்து மதங்களிலும் நீடிக்கும் சாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் பெரும் போராட்டமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும். இது மதச்சார்பற்ற புரட்சிகரஜனநாயக சக்திகளின் முன்னுள்ள மாபெரும் கடமை; நமது கடமை.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: